நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர்கள் நிபந்தனை தேவேகவுடா குற்றச்சாட்டு


நாடாளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர்கள் நிபந்தனை  தேவேகவுடா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 1 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-01T23:53:56+05:30)

கூட்டணி அரசை நடத்த காங்கிரஸ் தலைவர்கள் நிபந்தனை விதிப்பதாக தேவேகவுடா பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது.

12 தொகுதிகள்

முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். இந்த நிலையில் இரு கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்று ஏற்கனவே தீர்மானித்துள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய தேவேகவுடா, நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரசுக்கு வலியுறுத்தினார். இந்த நிலையில் அவர் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிபந்தனை விதித்தனர்

சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரசார் என்னிடம் வந்து, குமாரசாமி முதல்-மந்திரியாக எந்த நிபந்தனையும் இன்றி ஆதரவு வழங்குவதாக கூறினர். அதன்படி குமாரசாமி முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

அதன் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் ஒவ்ெவாரு நிபந்தனையாக விதித்தனர். மந்திரி பதவி பங்கீட்டில், மொத்த எண்ணிக்கையில் 1 சதவீதத்தை எங்கள் கட்சிக்கு வழங்கினர். அதன் பிறகு வாரிய தலைவர்கள் நியமனத்திலும் அதே விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது.

11 தொகுதிகள் வேண்டும்

முன்பு பா.ஜனதாவுடன் சேர்ந்து எங்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடத்தியது. அப்போது பா.ஜனதாவுக்கு 79 எம்.எல்.ஏ.க்கள் இருந்த னர். எங்கள் கட்சிக்கு இப்போது இருப்பது போலவே 38 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர்.

அப்போது மந்திரி பதவிகள் இரு கட்சிகளுக்கும் சம அளவில் பங்கீடு செய்யப்பட்டது. காங்கிரசாரின் விகிதாச்சாரப்படியே நாடாளுமன்ற தேர்தலில் எங்களுக்கு 3-ல் ஒரு பங்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும். அதாவது 11 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்.

தகராறு செய்யவில்லை

இந்த மாதத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. தொகுதி பங்கீட்டிலும் பிரச்சினை இருக்காது. காங்கிரசார் நிபந்தனைகளை விதித்து வந்தாலும் நாங்கள் எந்த தகராறும் செய்யவில்லை.

கர்நாடகத்தில் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஆயிரம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடியின் பயன் கிடைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அது தவறானது.

கடன் தள்ளுபடி

கா்நாடகத்தில் இதுவரை 60 ஆயிரம் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அனைத்து விவசாயிகளின் கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள் கூட்டணி ஆட்சியை வைத்து நிபந்தனை விதிப்பதாக தேவேகவுடா குற்றம்சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story