காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட இரும்பு மேம்பால திட்டத்தை அமல்படுத்தும் முடிவு சரியல்ல எடியூரப்பா பேட்டி


காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட இரும்பு மேம்பால திட்டத்தை அமல்படுத்தும் முடிவு சரியல்ல எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2019 4:00 AM IST (Updated: 2 Jan 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட இரும்பு மேம்பால திட்டத்தை அமல்படுத்தும் முடிவு சரியல்ல என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

காங்கிரஸ் ஆட்சியில் கைவிடப்பட்ட இரும்பு மேம்பால திட்டத்தை அமல்படுத்தும் முடிவு சரியல்ல என்று எடியூரப்பா கூறினார்.

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சினிமா படப்பிடிப்பில்...

முதல்-மந்திரி பிரான்சு நாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் இங்கு செத்துக் கொண்டிருக்கிறார்கள். முதல்-மந்திரி அங்கு தனது மகனின் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

முதல்-மந்திரி வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாடுகிறார். இதன் உண்மை நிலையை அவரே தெரிவிக்க வேண்டும். மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி, ெடல்லியில் எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்ததாக கூறுவது வெறும் வதந்தி.

கவனம் செலுத்தவில்லை

எங்களுடன் விவாதிக்காமல், ரமேஷ் ஜார்கிகோளியை அமித்ஷா சந்திக்க மாட்டார். அதற்கான வாய்ப்பும் இல்லை. நாங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பணியில் தீவிரமாக உள்ளோம். கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. சதீஸ் ஜார்கிகோளி என்ன சொன்னார் என்பது எனக்கு தெரியாது.

பெங்களூருவில் இரும்பு மேம்பாலம் அமைக்க முந்தைய காங்கிரஸ் அரசு முடிவு செய்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த முடிவை கைவிட்டது. இந்த நிலையில் இரும்பு மேம்பாலம் அமைக்க மீண்டும் முடிவு செய்துள்ளதாக துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறி இருக்கிறார்.

அவசரகதியில் முடிவு

இந்த விஷயத்தில் அவசரகதியில் முடிவு எடுக்கக்கூடாது. சட்டசபையில் விவாதிக்க வேண்டும். ஏற்கனவே கைவிடப்பட்ட திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது ஏன்?. இது சரியல்ல. இரும்பு மேம்பாலத்தால் ஏற்படும் பாதகங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story