திருப்பூரில் 5 தலைமுறையினர் கொண்டாடி மகிழ்ந்த குடும்ப விழா


திருப்பூரில் 5 தலைமுறையினர் கொண்டாடி மகிழ்ந்த குடும்ப விழா
x
தினத்தந்தி 2 Jan 2019 4:30 AM IST (Updated: 2 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 தலைமுறையினர் குடும்ப விழா நடத்தி அதில் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருப்பூர்,

இன்றைய அவசர கால வாழ்வில் வேலை வாய்ப்புக்காக வெளியூர் சென்றவர்கள் சொந்தங்களை மறந்து குடும்பத்துடன் சேர முடியாமல் வெளியூர்களிலேயே குடியேறுகிறார்கள். பின்னர் சொந்த ஊரை மட்டுமல்ல குடும்பத்தையே மறந்து விடுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். ஆனால் 5 தலைமுறையை சேர்ந்த சொந்த பந்தங்களை ஓரிடத்துக்கு வரவழைத்து குடும்ப விழா கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார்கள் திருப்பூரை சேர்ந்தவர்கள்.

திருப்பூர் வெங்கடேஷ்வரா நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தான் நேற்று காலை குடும்ப விழா நடைபெற்றது. மொத்தம் குடும்ப வாரிசுகள் 650 பேர் இருந்தாலும் நேற்றைய விழாவில் 80 வயது முதியவர் முதல் சிறுவர்கள் வரை 280–க்கும் மேற்பட்டவர்கள் மண்டபத்தில் உற்சாகத்துடன் குடும்ப விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதாவது ஒரு குடும்பத்தின் 3–வது தலைமுறை முதல் 7–வது தலைமுறையை சேர்ந்தவர்கள் வரை ஒன்று சேர்ந்து முதியவர்களுக்கு மரியாதை செலுத்தி ஒன்றாக பேசி மகிழ்ந்தனர். குடும்பத்தில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்த குடும்பத்தினர் காஜி குடும்ப நல அறக்கட்டளையும் வைத்திருக்கிறார்கள். அதன் தலைவராக அக்பர்(வயது 50) உள்ளார். திருப்பூரில் பிளக்ஸ் பிரிண்டிங் வைத்துள்ள இவர் இந்த குடும்ப விழா பற்றி கூறியதாவது:–

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை பூர்வீகமாக கொண்டவர் காஜி புடோன். இவர் முதல் தலைமுறை. இவருக்கு 2 மகன்கள். அவர்களுக்கு 18 வாரிசுகள் உள்ளனர். 3–வது தலைமுறையாக உள்ள இவர்களில் தற்போது 5 ஆண்கள், 2 பெண்கள் மட்டுமே உள்ளார்கள். மற்றவர்கள் இறந்து விட்டார்கள். இந்த விழாவில் இப்ராகிம் சாகிப்(80), ஜப்ரா சாகிப்(78), முகமது சாகிப்(70), கவுஸ் சாகிப்(68), தாவூது(60) ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு 36 ஆண்கள், 34 பெண்கள் என 70 வாரிசுகள் இருக்கிறார்கள். இவர்கள் 4–வது தலைமுறையை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அதில் நானும் ஒருவன். எங்களுக்கு கீழ் 5–வது தலைமுறையில் 145 வாரிசுகள் உள்ளனர். அவர்களுக்கு கீழ் 6–வது தலைமுறையில் 60 வாரிகள் இருக்கிறார்கள். 7–வது தலைமுறையாக 100 பேர் இருக்கிறார்கள்.

இவர்கள் திருப்பூர், கரூர், காங்கேயம், நெய்வேலி, கோவை, ஈரோடு, கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய ஊர்களில் வசித்து வருகிறார்கள். எங்கள் மூதாதையர் காலத்தில் இருந்து ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் அனைவரும் ஓரிடத்தில் கூடி விழா போல் கொண்டாடி வந்துள்ளனர். தற்போது நாங்கள் 5 தலைமுறையை சேர்ந்தவர்களை வரவழைத்து ஒரு மண்டபத்தில் சேர்ந்து கொண்டாடி வருகிறோம். மண்டபத்துக்கு காலையில் மார்க்க அறிஞர்களை வரவழைத்து அவர்கள் உபதேசம் அளித்தனர். பின்னர் குடும்ப நண்பர்கள் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள். மதியம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டோம்.

தற்போது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மருத்துவ உதவித்தொகை, இறப்பு கால உதவித்தொகை, அவசர தேவை போன்றவற்றுக்காக காஜி குடும்ப நல அறக்கட்டளையை உருவாக்கி நடத்தி வருகிறோம். மாதந்தோறும் அறக்கட்டளைக்கு சந்தா செலுத்துவோம். அந்த பணத்தை தேவையானவற்றுக்கு பயன்படுத்தி வருகிறோம். குடும்ப உறுப்பினர்களை ஒன்று சேர சந்திப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு கொடுத்துள்ளது. அதைவிட சொந்த பந்தங்களை மறக்காமல் தொடர வழிவகை செய்கிறது இந்த விழா.

இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக 2 அல்லது 3 தலைமுறைக்கு மேல் அறிய முடியாமல் இருக்கும் இந்த காலத்தில் 5 தலைமுறையை சேர்ந்தவர்கள் ஓரிடத்தில் கூடி குடும்ப விழா கொண்டாடுவது என்பது, இன்னும் நமது கலாசாரம், பண்பாடு அழியாமல் காக்கப்பட்டு வருகிறது என்பதற்கான அடையாளமாக திகழ்ந்து வருவதை காட்டுகிறது.


Next Story