பட்டாசு ஆலைகள் தொடர் அடைப்பு; சிவகாசியில் வர்த்தகம் கடும் பாதிப்பு


பட்டாசு ஆலைகள் தொடர் அடைப்பு; சிவகாசியில் வர்த்தகம் கடும் பாதிப்பு
x
தினத்தந்தி 2 Jan 2019 4:45 AM IST (Updated: 2 Jan 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 1½ மாதங் களாக தொடர்ந்து அடைத்து இருப்பதால் சிவகாசியின் ஒட்டு மொத்த வர்ததகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி,

சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1070 பட்டாசு ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இதனால் ஆண்டுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் பட்டாசு தொழிலில் மட்டும் வர்த்தகம் ஆனதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றும், முக்கிய சில வேதிப்பொருட்களை பயன்படுத்த கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 13–ந்தேதி சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் தங்களது உற்பத்தியை நிறுத்திக்கொண்டது. இதனால் இந்த ஆலையில் வேலை செய்து வந்த 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.

கடந்த நவம்பர் மாதம் சம்பளம் மற்றும் போனஸ் வாங்கிய பட்டாசு தொழிலாளர்கள் அதன் பின்னர் வேலை இல்லாமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். தங்களுக்கு கிடைத்த சம்பளம் மற்றும் போனஸ் பணத்தை செலவு செய்து விட்ட தொழிலாளர்கள் கடந்த மாதம் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக பலர் தினமும் குடும்பம் நடத்த கூட போதிய பணம் இல்லாமல் தங்களிடம் இருக்கும் நகைளை அடகு வைத்தும், விற்றும் குடும்ப நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். அதே போல் பலர் தங்களது குடும்பத்துடன் திருப்பூர், கோவை மற்றும் கேரளா மாநிலத்துக்கும் தினக்கூலி வேலை செய்ய இடம் பெயர்ந்து விட்டனர். இன்னும் சிலர் இங்குள்ள அச்சகங்களில் வேலை செய்ய தொடங்கி விட்டனர். பட்டாசு ஆலைகளில் வேலை செய்து வந்த 4 லட்சம் தொழிலாளர்களில் 50 ஆயிரம் பேர் மட்டும் சிவகாசியில் உள்ள அச்சகம் மற்றும் சுமைதூக்கும் தொழில், கட்டி தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் மற்றவர்கள் பட்டாசு ஆலைகள் விரைவில் திறக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறந்து தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினாலும், மத்திய–மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாத ஒரு நிலை உள்ளது. பட்டாசு ஆலைகளை இப்படி தான் நடத்த வேண்டும் என்ற உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்ததை தொடர்ந்து அதில் ஏதாவது ஏதாவது சலுகை கிடைத்தால் மட்டுமே சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். ஆனால் ஒவ்வொரு மாதமும் இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் பட்டாசுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு தொழிலாளர்களிடம் உள்ளது. இந்த மாதம் 22–ந்தேதி இந்த வழக்கு விசாரணை வருகிறது. இதில் பட்டாசு ஆலைகளுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றும் பட்டாசு தொழிலாளர்களும், ஆலை அதிபர்களும் நம்பிக்கையில் உள்ளனர்.

கடந்த 1½ மாதங்களாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் இங்குள்ள தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கிறார்கள். இதனால் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட அவதிப்படும் நிலை தொடர்கிறது. பலர் கடன் வாங்கியும், சிலர் இடம் மற்றும்நகைகளை விற்று பிழைத்து வரும் நிலையில் சிவகாசியில் உள்ள பல வர்த்தக நிறுவனங்கள் உரிய வியாபாரம் இன்றி தவித்து வருகிறது. குறிப்பாக துணிக்கடைகளிலும், வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களிலும், தங்க நகைகடைகளும் இதில் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளிக்கு தொடங்கும் வியாபாரம் பொங்கல் வரை தொடர்ந்து இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவாளிக்கே பல இடங்களில் உரிய விற்பனை ஆகாமல் இருந்தது. தற்போதும் அதே நிலை தொடர்கிறது. வழக்கமாக ஆகும் விற்பனையை காட்டிலும் இது 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை இருக்கும் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். இந்த வர்த்தக சரிவை சரி செய்ய ஒரே வழி பட்டாசு ஆலைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் உற்பத்தி தொடங்குவது தான். இதற்கான உரிய உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு இந்த மாத வழக்கு விசாரணையில் வழக்கும் என்று எதிர்பார்த்து பட்டாசு தொழிலாளர்களை போல் இதர வர்த்தகர்களும் காத்திருக்கிறார்கள்.

Next Story