தஞ்சை பழைய இரும்பு கடைகளில் குவிந்து கிடக்கும் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வீணாகும் வரிப்பணம்


தஞ்சை பழைய இரும்பு கடைகளில் குவிந்து கிடக்கும் தமிழக அரசின் விலையில்லா பொருட்கள் வீணாகும் வரிப்பணம்
x
தினத்தந்தி 1 Jan 2019 10:45 PM GMT (Updated: 2019-01-02T00:44:31+05:30)

தஞ்சை பழைய இரும்பு கடைகளில் தமிழகஅரசு வழங்கிய விலையில்லா பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் வரிப்பணம் வீணாகுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குபவை இலவச திட்டங்கள் தான். அந்த அளவுக்கு இலவச திட்டங்கள் மக்களை மயக்கி வைத்துள்ளது என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஏழைகள் மட்டுமின்றி வசதி படைத்தவர்கள் கூட விலையில்லா பொருட்களை வாங்குவதற்கு வரிசையில் நிற்பதை காண முடிகிறது. அ.தி.மு.க., தி.மு.க. என இரு கட்சிகளும் போட்டி, போட்டு தேர்தல் நேரத்தில் இலவச பொருட்களை அறிவித்தன. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச கலர் டி.வி.யானது அந்த தேர்தலின் கதாநாயகன் என்று சொல்லும் அளவுக்கு மக்களை கவர்ந்தது.

அதற்கு பிறகு அ.தி.மு.க.வும் கவர்ச்சிகரமான திட்டங்களை தேர்தல் நேரத்தில் அறிவித்தது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அவர், அந்த திட்டத்தை நிறைவேற்றினார். தமிழகஅரசு சார்பில் ஏழைகளுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்பட்டது. அந்த பொருட்களில் போதிய அளவிலான தரம் இல்லாத காரணத்தால் பெரும்பாலான சாதனங்கள் விரைவில் பழுதானது. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பலருடைய வீடுகளில் காட்சி பொருளாக தான் விலையில்லா பொருட்கள் இருந்தன. ஏனென்றால் மின்விசிறிகளுக்கு காயில் அமைத்து, ரீவைண்டிங் செய்வதற்கு கடைகளில் ரூ.400 முதல் ரூ.500 வரை வசூலிக்கின்றனர். இதற்கு பதிலாக புதிதாக மின்விசிறியே வாங்கிவிடலாம் என்பதால் பலர், பயன்படுத்தாமல் வீட்டிலேயே போட்டு வைத்தனர். சிலரது வீடுகளில் சிறுவர்களின் விளையாட்டு பொருளாகவும் பயன்படுத்தப்பட்டன. பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை குறைந்த விலைக்கு பழைய இரும்பு கடைகளில் வாங்குகின்றனர். வீட்டில் எந்த பயனும் இல்லாமல் கிடக்கும் பொருட்களால் இடநெருக்கடி ஏற்படுவதாக கருதிய மக்கள், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை குறைந்த விலைக்கு விற்றனர்.

அப்படி விற்கப்பட்ட விலையில்லா பொருட்களை வியாபாரிகள் வாங்கியதால் தஞ்சை கீழவாசலில் உள்ள பழைய இரும்பு கடையில் குவியல், குவியலாக விலையில்லா கிரைண்டர்கள், மிக்சி மற்றும் மின்விசிறிகள் பழுதாகி கிடக்கிறது. இந்த சாதனங்களை தனித்தனியே உடைத்து தேவையான பொருட்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நிதிஒதுக்கி இலவசங்களை வழங்கினாலும் அதில் போதிய தரம் இல்லாத காரணத்தால் இந்த திட்டம் முற்றிலும் பயனற்று வரிப்பணம் வீணாகி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story