சாதி மறுப்பு திருமணம் செய்தோர் பாதுகாப்பு மையம் மாவட்டம் தோறும் அமைக்க வலியுறுத்தல்


சாதி மறுப்பு திருமணம் செய்தோர் பாதுகாப்பு மையம் மாவட்டம் தோறும் அமைக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Jan 2019 3:00 AM IST (Updated: 2 Jan 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

சாதிமறுப்பு திருமணம் செய்தோருக்கான பாதுகாப்பு மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க வேண்டும்என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை,

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16–வது மாநில மாநாடு சிவகங்கையில் நடைபெற்றது. முதல் நாள் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 2–வது நாள் பிரதிநிதிகள் மாநாடு மநில தலைவர் செந்தில் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புக்குழு தலைவர் ராஜசேகரன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் பாலா அறிக்கை வாசித்தார். பொருளாளர் தீபா வரவு செலவு அறிக்கை வாசித்தார்.

இதில் அகில இந்திய தலைவர் முகமதுரியாஸ் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பன், பாலமுருகன் மாநில இணை செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:– சமூக, சட்ட பாதுகாப்புடன் கூடிய வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும்.

அரசு, பொதுத் துறை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். நீதிமன்ற வழிகாட்டுதல்படி சாதி மறுப்பு திருமணம் செய்தோருக்கான பாதுகாப்பு மையங்களை மாவட்டம் தோறும் அமைக்க வலியுறுத்துவது.

மத்திய அரசு சுற்றுச்சூழலிருந்து பட்டாசுக்கு விதிவிலக்கு அளித்து பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். பட்டாசு ஆலைகளை திறக்கும் வரை தமிழக அரசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து 3–வது நாள் நிகழ்ச்சியில் வாலிபர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் குணசேகரன் எழுதிய மறுவாசிப்பில் திராவிட இயக்கம் என்ற நூல் வெளியிடப்பட்டது.

நூலை அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாநில நிர்வாகி சின்னதுரை வெளியிட இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத்தலைவர் கண்ணன் பெற்றுக் கொண்டார். இதேபோல முன்னாள் மாநிலச் செயலாளர் ரமேஷ்பாபு எழுதிய விதையாய் விழுந்தவர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் வெளியிட வாலிபர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் காவியபாரதி பெற்றுக்கொண்டார்.


Next Story