அரியலூர் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு


அரியலூர் அருகே ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 11:00 PM GMT (Updated: 1 Jan 2019 7:27 PM GMT)

அரியலூர் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கீழப்பழுவூர்,

தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டு தனித்துவம் பெற்று விளங்குகிறது. காளைகளுக்கு நன்றி தெரிவிக்கவும், அவற்றிற்கு பெருமை சேர்க்கவும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கும் ஜல்லிக்கட்டு தென் மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு மேல் நடைபெறும். இதில் வீரர்களுக்கு பலவித பரிசுகள் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு அரியலூர் அருகே மனத்தான்குளம் கிராமத்தில் உள்ள பொன்னன்குளம் ஏரி திடலில் நேற்று நடந்தது. இதில் அரியலூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அலங்கரித்து கொண்டு வரப்பட்ட 247 காளைகள் பங்கேற்றன.

முதலில் புனித சூசையப்பர் ஆலயத்தின் காளை வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டு கோலாகலமாக தொடங்கப்பட்டது.

பின்னர் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. இதில் 150 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர். இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றபோது காளைகள் முட்டியதில் 10 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த கனகசபை மகன் அசோக்(வயது 35) காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவர் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தயாராக இருந்த சுமார் 50 காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதால் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மின்விசிறி, செல்போன், சைக்கிள், கட்டில், ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. காலை 8 மணி அளவில் தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டு மதியம் 12 மணி அளவில் நிறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story