புத்தாண்டு பிறப்பையொட்டி மாமல்லபுரம் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்
ஆங்கில புத்தாண்டையொட்டி மாமல்லபுரம் விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
மாமல்லபுரம்,
ஆங்கில புத்தாண்டையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. விடுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் கலந்துகொண்டு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர்.
அங்குள்ள கடற்கரை ஓரத்தில் இளம்பெண்கள் நடனமாடி மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலின் பின்புறம் கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. நீச்சல் குளத்திலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
அரசு சுற்றுலா விடுதியில் குடும்பத்துடன் வந்திருந்தவர்களும் தங்கள் குழந்தைகளுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல்லவன் சிலை அருகில் காவல் சோதனை சாவடி அமைத்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார் (மாமல்லபுரம்), சிரஞ்சீவி (திருக்கழுக்குன்றம்) ஆகியோர் தலைமையில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியிலும், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.
கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குடிபோதையில் வந்த வாலிபர்களையும், பெண்களையும் போலீசார் எச்சரித்து தனியார் விடுதிகளுக்கு அனுப்பி வைத்தனர். போதை தெளிந்தவுடன் மட்டுமே தனியார் விடுதி, ஓட்டல் நிர்வாகத்தினர் இவர்களை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பல்லவன் சிலை அருகில் உள்ள சோதனை சாவடியில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு இனிப்புகள் வழங்கினார். மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபர்களை மடக்கி காஞ்சீபுரம் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பினார். காரில் ஆண் நண்பர்களுடன் போதையில் வந்த பெண்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.