சுங்குவார்சத்திரம் அருகே புத்தாண்டு கொண்டாட சென்ற வாலிபர் வாகனம் மோதி பலி


சுங்குவார்சத்திரம் அருகே புத்தாண்டு கொண்டாட சென்ற வாலிபர் வாகனம் மோதி பலி
x
தினத்தந்தி 1 Jan 2019 9:45 PM GMT (Updated: 1 Jan 2019 7:40 PM GMT)

சுங்குவார்சத்திரம் அருகே புத்தாண்டு கொண்டாட சென்ற வாலிபர் வாகனம் மோதி பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் திருமலை. இவர் சேலைகளுக்கு பூ டிசைன் போடும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சக்திவேல் (வயது 21). பி.எஸ்சி., படிப்பை முடித்து வேலைதேடி வந்தார். நேற்று முன்தினம் இரவு 1 மணிக்கு நண்பர்களுடன் காஞ்சீபுரத்தை அடுத்த ராஜகுளம் பகுதியில் உள்ள இரவு உணவு விடுதியில் புத்தாண்டை கொண்டாட தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

சுங்குவார்சத்திரம் அருகே சென்றபோது சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சக்திவேல் மீது பயங்கரமாக மோதியது. இதில் சக்திவேல் தூக்கிவீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தண்டலம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் பரிதாபமாக இறந்து போனார்.

இது குறித்து தகவல் அறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அசோகசக்கரவர்த்தி சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீனவ கிராமமான அரங்கண்குப்பத்தை சார்ந்தவர் பழனி (30). இவர் காட்டுப்பள்ளியில் உள்ள தனியார் கப்பல் கட்டும் தளத்தில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று வேலை முடிந்து தன்னுடன் வேலை செய்யும் கூனங்குப்பத்தை சேர்ந்த கொடிஅரசன் (32) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலையில் கோரைக்குப்பம் மீனவ கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக காரில் ஒரு சிலர் வந்தனர். அந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பழனி பலியானார். படுகாயம் அடைந்த கொடிஅரசன் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story