பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு பிரசார இயக்கம்


பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு பிரசார இயக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.

பெரம்பலூர்,

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நீர்நிலைகள் மற்றும் வளிமண்டல சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கவும் தமிழக அரசு பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை ஜனவரி 1-ந் தேதி முதல் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்து உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அரசின் உத்தரவை அமல்படுத்துவதை உறுதி செய்யும் விதமாக ஓட்டல்களில் சாப்பாடு, கலவைசாதங்கள், டிபன் வகைகளை மடித்து தருவதற்கு பட்டர் பேப்பருக்கு பதிலாக வாழை இலைகள் மற்றும் காகிதங்கள் பயன்படுத்தப்பட்டன. சாம்பார் சட்னி ஆகியவற்றை வினியோகிக்க அலுமினியம் பாயில் தாள்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிறு, சிறு கவர்கள் பயன்படுத்தப்பட்டன. பிளாஸ்டிக் கேரி பைகளுக்கு பதிலாக ஓவன் கேரி பைகள் வினியோகிக்கப்பட்டது.பெரம்பலூரை பொறுத்தவரையில் முதல் நாளன்றே பெரும்பாலான ஓட்டல்கள் அரசின் கொள்கை முடிவை முழுமையாக கடைபிடித்தன. அதேபோல பெட்டிக்கடைகளில் பிளாஸ்டிக் கப் விற்பனைக்கு பதிலாக பேப்பர் கப் விற்பனை செய்யப்பட்டது. பிளாஸ்டிக் கேரி பைகள் விற்பனை தடை செய்யப்பட்டதால், பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் வியாபாரம் வெகுவாக குறைந்திருந்தது.

இதனிடையே பெரம்பலூர் நகரில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்களிடையே பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்பாட்டை அதிகரிக்க செய்யவும், ஓட்டல்கள், உணவுப்பொருட்கள், இறைச்சி வாங்க செல்லும்போது பாத்திரங்களை கொண்டு செல்வதற்காக வணிகர் நலச்சங்கம் சார்பில் விழிப்புணர்வு பிரசார இயக்கம் நேற்று நடத்தப்பட்டது.பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் காந்தி சிலை அருகில் இருந்து தொடங்கிய இந்த பிரசார இயக்கத்தை அதன் தலைவர் சத்யா நடராஜன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொது செயலாளர் நல்லதம்பி, மாவட்ட அவைத்தலைவர் தனபால், துணைதலைவர் முகமது ரபீக், பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பழைய பஸ் நிலையம், சூப்பர் பஜார்தெரு, பால் நிலையத்தெரு, பள்ளிவாசல் தெரு, கடைவீதி போன்ற பகுதிகளில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Next Story