கஜா புயல் நிவாரண பணிகளுக்கு மேலும் ரூ.13 ஆயிரம் கோடி தேவை; அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
கஜா புயல் பாதிப்பு நிவாரண பணிகளுக்கு மேலும் ரூ.13 ஆயிரம் கோடி தேவை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
திருவொற்றியூர்,
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மகத்தான வெற்றி பெறுவோம். சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கருத்துகளை உதாசீனப் படுத்த முடியாது. அவர் கூறியிருப்பது, ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்புடையவர்களை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால்தான் உண்மை வெளிவரும்.
ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சி.பி.ஐ. விசாரித்தபோது ஜெயின் கமிஷனும் விசாரித்தது. அதேபோல தமிழக அரசும் விசாரணை குழு அமைத்து சம்பந்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும். இவர்களை அழைத்து வந்து வாக்குமூலங்களை மட்டும் வாங்குவதால் எந்த பிரயோசனமும் இல்லை. உண்மையும் வெளி வராது. அதனால் அவர்களுக்கு நல்ல ‘டிரீட்மெண்ட்’ கொடுக்கவேண்டும்.
யாரெல்லாம் இதில் தொடர்புடையவர்கள், சம்பந்தப்பட்டவர்களோ வாக்குமூலம் அளித்தவர்கள் என அனைவரையும் போலீஸ் டிரீட்மெண்டில் விசாரிக்கப்படவேண்டும் மரணத்தில் எழும் சந்தேகத்தில் தமிழக அரசு தேவையென்றால் விசாரணை கமிஷன் அமைக்கும். தவறு செய்யவில்லை என்றால் நேரடியாக வந்து வாக்குமூலம் கொடுத்துவிட்டு செல்லட்டும். சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்துக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுவது என்று சொன்னால் ஒரே குடும்பம் சசிகலாவும் தினகரனும்தான். அவர்களால் மட்டுமே ஜெயலலிதாவிற்கு இழுக்கு ஏற்படுகிறது.
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசிடம் ரூ.15,600 கோடி கேட்டதற்கு 1,146 கோடி கொடுத்துள்ளனர். இது யானை பசிக்கு சோளப்பொரி போல. கொஞ்சம் பெரியதாக தெரிகிறதே, தவிர யானை பசியை போக்குவதாக இல்லை. நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது.
தற்போது ஒதுக்கிய தொகையை உடனடி தேவைக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். தவிர நிரந்தர தேவைக்கு ரூ.13 ஆயிரம் கோடியை மத்திய அரசு கொடுப்பதற்கு அழுத்தம் தரவேண்டும். கண்டிப்பாக கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.