சாலை போக்குவரத்து கழகத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு; வருமானத்தை பெருக்க வலியுறுத்தல்
புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழக அலுவலகத்தில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வருமானத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று புதுவை அரசின் சாலைப்போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அலுவலகத்தில் ஆய்வுமேற்கொண்டார். அப்போது அரசு பஸ்களின் நிலை குறித்து அறிவதற்காக அந்த பஸ்களில் ஏறி பார்வையிட்டார்.
பயணிகளின் வசதிக்காக இருக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அதில் தேவைப்படும் மாற்றங்களை செய்ய மேலாண் இயக்குனர் குமாரிடம் அறிவுறுத்தினார். டிக்கெட் பரிசோதகர்கள் அடிக்கடி சோதனை நடத்தவும் உத்தரவிட்டார்.
குறைந்த வருவாய் உள்ள வழித்தடங்களில் வசூலை மேம்படுத்த வழிகளை கண்டறியுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஊழியர்களுக்கு சம்பளம், செலவுகள் ஆகியவற்றை ஈடுகட்ட வருமானத்தை பெருக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
புதுவை சாலைப்போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும் 139 பஸ்களில் 64 பஸ்கள் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. சாலைப்போக்குவரத்து கழகத்துக்கு ஓராண்டுக்கான செலவு ரூ.64 கோடியே 61 லட்சமாக உள்ளது. ஆனால் ரூ.50 கோடியே 92 லட்சம்தான் வருமானமாக உள்ளது. ரூ.13 கோடியே 69 லட்சம் துண்டு விழுகிறது. இதை சரிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.