புதுச்சேரியில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் - நாராயணசாமி பேட்டி


புதுச்சேரியில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2019 5:00 AM IST (Updated: 2 Jan 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 5 கவர்னர்கள் செயல்படுகிறார்கள் என்று முதல்– அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

 

புதுச்சேரி, 

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

 புதுவை மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து உரிய நிதி கிடைக்காவிட்டாலும் மாநில அரசின் வருவாயில் இருந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நமது மாநிலத்துக்கு பெரிய சவாலாக இருப்பது மத்திய அரசின் ஒத்துழைப்பின்மை மற்றும் கவர்னர் கிரண்பெடியின் அதிகாரவரம்புக்கு மீறிய செயல். இருந்தபோதிலும் நிதி ஆயோக், உலக வங்கி கணக்கெடுப்பில் மக்கள் விரும்பி வாழக்கூடிய இடங்களில் புதுச்சேரியை 5–வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். கோப்புகளை அதிகாரம் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகள் படைத்திருப்போம்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவடைந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த கோரிக்கைக்கு முழுவடிவம் கொடுக்கப்படவில்லை. ஆனால் நாங்கள் எம்.எல்.ஏ.க்களை டெல்லிக்கு அழைத்து சென்று மத்திய மந்திரிகளையும், பல்வேறு தேசிய தலைவர்களையும் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளோம்.

வருகிற 4–ந்தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளோம். ஏற்கனவே சுஷ்மா சுவராஜ் தலைமையிலான பாராளுமன்ற குழு புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க பரிந்துரை செய்துள்ளது. இப்போது முதல் முறையாக மத்திய அரசை எதிர்த்து மாநில அந்தஸ்து கோரிக்கைக்காக டெல்லியில் போராட்டம் நடத்துகிறோம்.

புதுவை மாநிலத்துக்கு கிரண்பெடியை கவர்னராக ஜனாதிபதி கடந்த 2016–ம் ஆண்டு நியமித்தார். ஆனால் கவர்னரின் அலுவலகத்தை செயலகமாக எந்தவித அனுமதியும் பெறாமல் கிரண்பெடி பிரகடனப்படுத்தி கடிதம் அனுப்புகிறார்.

கவர்னரின் செயலாளராக பணியாற்றிய தேவநீதிதாஸ் ஓய்வுபெற்றபோது அவரை ஆலோசகராக நியமிக்க கவர்னர் கிரண்பெடி கோப்பு அனுப்பினார். அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கவில்லை. அந்த கோப்புக்கு நானும் ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்காததை மறைத்து அவரை சிறப்பு பணி அதிகாரி மற்றும் ஆலோசகராக நியமித்துக்கொண்டார். இதுதொடர்பாக நான் உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினேன். அதற்கு பதில் ஏதும் வரவில்லை.

கவர்னர் மாளிகையில் செயலாளர் யாரும் இல்லை. மாநிலத்தில் பணிபுரியும் எந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியையும் செயலாளராக நியமிக்கலாம் என கவர்னருக்கு கோப்பு அனுப்பினேன். ஆனால் அவர் யாரையும் தேர்வு செய்யவில்லை. கிரண்பெடிக்கு அடுத்தபடியாக 2–வது கவர்னராக தேவநீதிதாஸ் செயல்படுகிறார். அரசு உயர் அதிகாரிகளை கூட்டத்துக்கு அழைப்பது அவரது வேலை இல்லை.

3–வது கவர்னராக கவர்னரின் தனிச்செயலாளர் ஸ்ரீதர் செயல்படுகிறார். அவர்தான் அதிகாரிகளை அழைத்து தேர்வு வைக்கிறார். இது எந்த சட்டத்தில் உள்ளது? 4–வது கவர்னராக காவல்துறை அதிகாரி ஒருவர் செயல்படுகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், காவல்துறை இருக்கும்போது இவரே புகார்களை பெறுவது, விசாரிப்பது போன்ற செயல்களை செய்கிறார். இவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? 5–வது கவர்னராக இன்னொரு கட்டுப்பாட்டாளர் அங்கு உள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது புதுச்சேரிக்கு 5 கவர்னர்களை ஜனாதிபதி நியமித்தாரா? என்று எனக்கே தெரியவில்லை.

கவர்னருடன் இருப்பவர்கள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளனர். கவர்னர் கிரண்பெடி இன்னும் 3 மாதம்தான் இங்கு இருப்பார். அதன்பின் இந்த அதிகாரிகள் என்ன செய்வார்கள்? புதுவையில் என்ன அரசாங்கம் நடக்கிறதா? இல்லை கோமாளித்தனம் நடக்கிறதா? இதுபோன்ற செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கவர்னரின் செயல்பாடு குறித்து மக்கள் புரிந்துகொண்டுவிட்டார்கள்.

அவரால் திட்டங்களை தள்ளிப்போட முடியுமே தவிர நிறுத்த முடியாது. புதுவை மாநிலத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்போது அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் இலவச பொருட்கள் கொடுக்க முடியாது என்கிறார். அதற்கு நிதி இல்லை என்று பொய் கூறுகிறார். குடிமைப்பொருள் வழங்கல்துறையில் ரூ.20 கோடி உள்ளது.

கடந்த காலங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கே இலவச பொருட்கள் வழங்கப்படும் என்று எனக்கும், அமைச்சர்களுக்கும் தெரியாமல் அதிகாரிகளை கொண்டு விதிகளை உருவாக்கினார். அதை மாற்ற இவர் யார்? அதை நாங்கள் ஏற்கவில்லை. அதனால் அனைவருக்கும் பொங்கல் இலவச பொருட்கள் வழங்க மீண்டும் கோப்பு அனுப்பி உள்ளோம்.

இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது முதல்–அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.


Next Story