மஞ்சூர் பகுதியில் உறைபனி தேயிலை செடிகள் கருகின


மஞ்சூர் பகுதியில் உறைபனி தேயிலை செடிகள் கருகின
x
தினத்தந்தி 2 Jan 2019 3:30 AM IST (Updated: 2 Jan 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் பகுதியில் உறைபனி பொழிவு உள்ளது. இதனால் தேயிலை செடிகள் கருகுகின்றன.

மஞ்சூர், 

நீலகிரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரமாக விளங்கி வருவது பச்சை தேயிலை விவசாயம். இதனை நம்பி 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் குந்தா பகுதியில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பலத்த மழை பெய்து வந்ததால் இந்த மழையை பயன்படுத்தி பெரும்பாலான விவசாயிகள் குந்தா பகுதியில் தங்களது தேயிலை தோட்டங்களுக்கு உரமிட்டனர். இதன் காரணமாக தேயிலை தோட்டங்களில் தேயிலை மகசூல் அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் கடந்த வாரமாக குறிப்பாக மஞ்சூர் பகுதியில் கால நிலை மாற்றத்தால் குளிர் வாட்ட தொடங்கியது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடந்ததால் இயல்பு நிலை பாதிக்கப்ட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மேகமூட்டம் விலகி வெயில் அடித்தது. மாலை நேரத்தில் குளிர் வாட்டியது.

இந்த நிலையில் நேற்று காலை மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளான எடக்காடு, எமரால்டு, காந்திகண்டி, முள்ளிகூர் ஆடா, அண்ணாநகர், லாரன்ஸ், பாலாடா, கல்லக்கொரை, மணியட்டி, மீக்கேரி, நஞ்சநாடு, காத்தாடி மட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் உறைபனி கொட்டியது.

காலை நேரத்தில் புல்வெளிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உறைபனி காணப்பட்டது. ஊட்டி அருகே உள்ள சிங்கர்போஸ்ட், தலைகுந்தா பகுதிகளிலும் உறைபணி காணப்பட்டது. குறிப்பாக தேயிலை தோட்டங்களில் மகசூலுக்கு தயாராக இருந்த பச்சை தேயிலை மீது உறைபனி கொட்டியது. இதன் காரணமாக பச்சை தேயிலை கருகி வருகின்றன. மேலும் ஒரு சில தோட்டங்களில் விவசாயிகள் தேயிலை பறிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் லட்சகணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனையை தெரிவித்தனர். 

Next Story