உத்தனப்பள்ளியில் கற்களை வீசிய வாலிபரை ஓட, ஓட துரத்திய காட்டு யானை மயிரிழையில் உயிர் தப்பினார்


உத்தனப்பள்ளியில் கற்களை வீசிய வாலிபரை ஓட, ஓட துரத்திய காட்டு யானை மயிரிழையில் உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 2 Jan 2019 4:30 AM IST (Updated: 2 Jan 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளியில் யானை கூட்டம் மீது கற்களை வீசிய வாலிபரை ஒரு காட்டு யானை ஓட, ஓட துரத்தியதால் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ராயக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்குள் வந்துள்ளன. அவை பல குழுக்களாக பிரிந்து அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. தற்போது சானமாவு காட்டில் 70 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை அருகில் உள்ள கிராமங்களுக்குள் சென்று விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் உத்தனப்பள்ளி வனப்பகுதியில் 20 யானைகள் முகாமிட்டிருந்தன. அவை நேற்று முன்தினம் காலை விவசாய நிலங்கள் வழியாக வனப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தன. அந்த நேரம் இளைஞர்கள், சிறுவர்கள் அந்த யானைகளை விரட்டினார்கள்.

வாலிபரை விரட்டியது

அப்போது ஒரு வாலிபர் ஆர்வம் மிகுதியால் யானையின் அருகில் சென்று கற்களை வீசி யானைகளை விரட்டினார். அந்த நேரம் அந்த கூட்டத்தில் இருந்து வந்த ஒரு காட்டு யானை அந்த வாலிபரை ஓட, ஓட விரட்டியது. யானையிடம் இருந்து அந்த வாலிபர் மயிரிழையில் உயிர் தப்பினார். தேன்கனிக்கோட்டை அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையை கடந்த யானைகளை இளைஞர்கள் சிலர் கற்களை வீசி தாக்கிய வீடியோக்கள், படங்கள் வைரலாக பரவியது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மீண்டும் யானைகளின் மீது வாலிபர் ஒருவர் கற்கள் வீசி தாக்கிய சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. யானைகள் மீது கற்களை வீசும் நபர்கள் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story