கோவையில், வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்


கோவையில், வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 3:23 AM IST (Updated: 2 Jan 2019 3:23 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வணிகர் சங்கங்களின் பேரவையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், அன்னிய பொருட்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

ஆன்லைன் பொருட்கள் விற்பனையை கண்டித்தும், சில்லறை வர்த்தகத்தை காப்பாற்ற வேண்டியும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கோவை மாவட்டம் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அன்னிய நாட்டு குளிர்பானம் மற்றும் உணவு பொருட்களை திடீரென்று தரையில் கொட்டினர். பின்னர் அதன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றனர்.

உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் கொட்டிய அன்னிய பொருட்களை காலால் மிதித்து கோஷமிட்டனர்.

இது குறித்து மாநில தலைவர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ஆன்லைன் பொருட்கள் விற்பனையை கண்டித்தும், சில்லறை வர்த்தகத்தை காப்பாற்ற வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

அன்னிய பொருட்களின் விற்பனையால் வியாபாரிகள் பெரிதும் பாதிக் கப்பட்டு உள்ளனர். இதனால் அன்னிய பொருட்களை தீவைத்து எரிக்க முயன்றோம். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தது கண்டிக்கத்தக்கது என்றார்.

இதில் மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாநில இணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரன், ஜீவாராம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story