கடலூரில், என்ஜினீயரிங் கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


கடலூரில், என்ஜினீயரிங் கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Jan 2019 3:45 AM IST (Updated: 2 Jan 2019 4:17 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் என்ஜினீயரிங் கல்லூரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குமாரப்பேட்டை ஜெயராம்நகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 42). இவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி சோனா பேட்ரிஷியா (39). இவர் சேந்திரக்கிள்ளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சொக்கலிங்கம் காதலித்து திருமணம் செய்து கொண்டதில் இருந்து, அவரது அண்ணன், தம்பி உள்பட உறவினர்கள் யாரும் அவருடன் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவரை அவரது மனைவி சோனாபேட் ரிஷியா காப்பாற்றி வந்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சொக்கலிங்கம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது பற்றி அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சொக்கலிங்கம் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக சோனாபேட் ரிஷியா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story