ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைந்தது


ஜி.எஸ்.டி. வரி மாற்றத்தால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் குறைந்தது
x
தினத்தந்தி 2 Jan 2019 3:45 AM IST (Updated: 2 Jan 2019 4:30 AM IST)
t-max-icont-min-icon

‘ஜி.எஸ்.டி’ வரி குறைப்பு காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்ட தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் நேற்று குறைக்கப்பட்டது.

கடலூர், 

சரக்கு சேவை வரி விதிப்பில் மத்திய அரசு சமீபத்தில் மாற்றங்கள் செய்தது. பல பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது. சினிமா டிக்கெட்டுகள் மீதான வரியையும் குறைத்தனர். ஏற்கனவே ரூ.100-க்கு அதிகமான சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் ரூ.100-க்கு குறைவான டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதித்து இருந்தனர்.

புதிய வரி மாற்றத்தின் படி சினிமா டிக்கெட்டுகள் மீதான 28 சதவீத வரி 18 சதவீதமாகவும், 18 சதவீதம் வரி 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. ஜனவரி 1-ந்தேதி முதல் இது அமலுக்கு வரும் என்றும் அறிவித்தனர். அதன்படி சென்னையில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் நேற்று டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டது. கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களிலும் டிக்கெட் கட்டணம் குறைந்தது.

கடலூர் மாவட்டத்தில் ஏ, பி, சி. என 3 வகைகளில் சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏ வகை சினிமா தியேட்டர்கள் 7, குளிர்சாதன வசதி அல்லாத பி வகை சினிமா தியேட்டர்கள் 12, சி வகை சினிமா தியேட்டர்கள் 4 என மொத்தம் 23 சினிமா தியேட்டர்கள் உள்ளன.

இதில் பி மற்றும் சி வகை சினிமா தியேட்டர்களில் மட்டும் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட தலைவர் ஜெயராமன் கூறியதாவது:-

சினிமா டிக்கெட் கட்டணத்தின் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட கட்டணம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் பி மற்றும் சி ஆகிய 2 வகை சினிமா தியேட்டர்களில் முதல் வகுப்பு கட்டணம் ரூ.83-ல் இருந்து ரூ.78 ஆகவும், 2-ம் வகுப்பு கட்டணம் ரூ.71-ல் இருந்து ரூ.67 ஆகவும், 3-ம் வகுப்பு கட்டணம் ரூ.59-ல் இருந்து ரூ.56 ஆகவும் வசூல் செய்யப்படுகிறது என்றார். ஆனால் ஏ வகை சினிமா தியேட்டர்களில் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட கட்டணம் வசூல் அமலுக்கு வரவில்லை.

இது குறித்து சினிமா தியேட்டர் உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்ட பின்னர் டிக்கெட் கட்டணம் எவ்வளவு வசூல் செய்ய வேண்டும் என்பது குறித்த அரசாணை எங்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் பழைய கட்டண முறைப்படியே முதல் வகுப்பு ரூ.127, 2-ம் வகுப்பு ரூ.100, 3-ம் வகுப்பு ரூ.52 என டிக்கெட் கட்டணம் வசூல் செய்து வருகிறோம் என்றார்.

விழுப்புரம் தியேட்டர் உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 70 தியேட்டர்களில் நேற்று சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.4 முதல் ரூ.15 வரை குறைந்துள்ளது. ரூ.60.12-க்கு இருந்த சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.57.06-வும், ரூ.72.22 கட்டணம் ரூ.68.74-வும், ரூ.84.31 கட்டணம் ரூ.80.02-வும், ரூ.96.41 கட்டணம் ரூ.91.50-வும், ரூ.108.51 கட்டணம் ரூ.103-வும் குறைந்துள்ளது. இதேபோல் ரூ.139.81 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் ரூ.128.89-வும், ரூ.152.55 கட்டணம் ரூ.140.63-வும், ரூ.165.29 கட்டணம் ரூ.152.57-வும், ரூ.178.04 கட்டணம் ரூ.164.13-வும், ரூ.190.78 கட்டணம் ரூ.175.88-வும் குறைந்துள்ளது என்றார். 

Next Story