வந்தவாசி அருகே காதலனுடன் விஷம் குடித்த சிறுமி பரிதாப சாவு


வந்தவாசி அருகே காதலனுடன் விஷம் குடித்த சிறுமி பரிதாப சாவு
x
தினத்தந்தி 2 Jan 2019 5:05 AM IST (Updated: 2 Jan 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

வந்தவாசி அருகே காதலனுடன் விஷம் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

வந்தவாசி, 

காதலனுடன் விஷம் குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தாள். காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வந்தவாசி அருகே நடந்த இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

வந்தவாசி தாலுகா மழுவங்கரணை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 20), தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார். 18 வயது அடைவதற்கு முன்பே சிறுமியை கோவிந்தராஜ் காதல் செய்ததற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அறியாத வயதில் காதலித்த அந்த சிறுமி காதலன் சொன்னதையே நம்பிசென்றார். இந்த நிலையில் பெற்றோரின் எதிர்ப்பு காரணமாக விரக்தி அடைந்த இவர்கள் சினிமாவில் வருவதுபோல் விஷம் குடிக்க முடிவு செய்தனர். இந்த நிலையில் இருவரும் அந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தின் பின்புறம் உள்ள புளியந்தோப்புக்கு சென்றனர். அங்கு அவர்கள் விஷம் குடித்தனர். இதில் இருவரும் மயங்கி விழுந்தனர்.

அங்கு சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இருவரையும் அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவரையும் பரிசோதித்தபோது சிறுமி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். மேலும் கோவிந்தராஜ் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதுபற்றி கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story