திண்டுக்கல் சரகத்தில் ரூ.2½ கோடி நகைகள் மீட்பு: விதிமுறைகளை மீறிய 47 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து
திண்டுக்கல் சரகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ரூ.2½ கோடி நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிய 47 ஆயிரத்து 428 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கொலை, கொள்ளை, விபத்து உள்ளிட்டவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்கள் குறித்த விவரமும் வருமாறு:-
கேள்வி:- திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகின்றன. அவற்றை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- திண்டுக்கல் மாவட்டத்தில் 36, தேனியில் 35 என திண்டுக்கல் சரகத்தில் கடந்த ஆண்டு மொத்தம் 71 கொலைகள் நடந்துள்ளன. இதில் தொடர்புடையவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைகள் மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேள்வி:- எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்?
பதில்:- திண்டுக்கல்லில் 107 பேரும், தேனியில் 22 பேரும் என மொத்தம் 129 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகம்.
கேள்வி:- நிறைய வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் உள்ளனரே?
பதில்:- திண்டுக்கல் சரகம் முழுவதும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத வழக்குகள் மீது தனிக்கவனம் செலுத்தி தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- திண்டுக்கல் சரகத்தில் அதிக அளவு சாலை விபத்துகள் நடக்கிறதே. அவற்றை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- வாகன விபத்துகளை பொறுத்தவரை திண்டுக்கல் சரகத்தில் விபத்தால் இறப்பு ஏற்படுத்தியதற்காக கடந்த 2017-ம் ஆண்டு 794 வழக்குகளும், காயம் ஏற்படுத்தியதற்காக 2 ஆயிரத்து 67 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேபோல், கடந்த ஆண்டு இறப்பு ஏற்படுத்தியதற்காக 602 வழக்குகளும், காயம் ஏற்படுத்தியதற்காக 2 ஆயிரத்து 87 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விபத்து தடுப்பு நடவடிக்கையாக திண்டுக்கல் சரகத்தில் 120-க்கும் மேற்பட்ட இடங்களில் டிரம்கள், 200-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதாக திண்டுக்கல் சரகத்தில் மொத்தம் 47 ஆயிரத்து 428 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கையும், விபத்துகளால் இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளன.
கேள்வி:- திண்டுக்கல் சரகத்தில் எத்தனை திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளன?
பதில்:- திண்டுக்கல் மாவட்டத்தில் 421 கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்களும், தேனி மாவட்டத்தில் 279 சம்பவங்களும் நடந்துள்ளன. இதுகுறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பல சம்பவங்களில் நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
கேள்வி:- திருட்டு, கொள்ளை வழக்குகளில் எவ்வளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன? அவற்றை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்:- திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 75 லட்சம், தேனியில் ரூ.75 லட்சம் என ரூ.2½ கோடி மதிப்பில் நகைகள், பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் திண்டுக்கல் சரகத்தில் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேள்வி:- திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறதே?
பதில்:- இரு மாவட்டங்களிலும் தலா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் 18 போலீசாரை கொண்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதிகள், மலைக்கிராமங்களை கண்காணித்து வருகின்றனர். தற்போது திண்டுக்கல் சரகத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை.
கேள்வி:- சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது அதிகரித்து வருகிறதே?
பதில்:- திண்டுக்கல் சரகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி, கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 870 பேரும், தேனியில் 4 ஆயிரத்து 76 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேள்வி:- பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
பதில்:- பள்ளிகள், மகளிர் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு பெண் போலீஸ் அதிகாரிகள் தலைமையில் போலீசார் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு திண்டுக்கல் சரகத்தில் 287 விழிப்புணர்வு முகாம் கள் நடத்தப்பட்டுள்ளது.
கேள்வி:- இதுவரை எத்தனை பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்?
பதில்:- திண்டுக்கல் மாவட்டத்தில் 43 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 52 பேரும், தேனியில் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 87 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேள்வி:- திண்டுக்கல் சரகத்தில் மொத்தம் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?
பதில்:- திண்டுக்கல்லில் 16 ஆயிரத்து 174 வழக்குகளும், தேனியில் 16 ஆயிரத்து 665 வழக்குகளும் என மொத்தம் 32 ஆயிரத்து 839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட அதிகம் ஆகும்.
கேள்வி:- பொதுமக்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
பதில்:- போலீசார் நினைத்தால் மட்டும் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாது. இதற்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்கள் பகுதியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ இருந்தால் உடனே பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும் சட்டத்தை மதித்து தனி மனித ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். அப்போது தான் குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும். போலீசார், பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story