ஆங்கில புத்தாண்டையொட்டி அண்ணாமலையார்-உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம்
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை,
2018-ம் ஆண்டு முடிந்து 2019-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தது. உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. திருவண்ணாமலை மாவட்டத்திலும் நள்ளிரவு 11.59-க்கு முடிந்து 12 மணி பிறந்ததும் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று முழங்கி புத்தாண்டை வரவேற்று கேக் வெட்டி ஆட்டம் பாட்டத்தில் பலர் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 5 நிமிடங்கள் பட்டாசு, வான வெடிகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஏராளமானோர் செல்போன்கள் மூலம் உறவினர்கள், நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து நேற்று அதிகாலையில் பொதுமக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீராடிவிட்டு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனத்துக்கு தனி வழி அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமமின்றி வரிசையாக கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி அதிகாலை அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தி சிலைக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு ஏராளமான பக்தர்கள் பனி பொழிவையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்றனர். புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் விடிய விடிய ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
செங்கம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு செங்கத்தில் உள்ள வேணுகோபால பார்த்தசாரதி கோவில், காக்கங்கரை விநாயகர் கோவில், கரியமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மண்மலை வாலசுப்ரமணியர் கோவில் மற்றும் அனுபாம்பிகை சமேத ரிஷபேஷ்வரர் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு கோவில்களில் அன்னதானமும் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story