வாணியம்பாடி அருகே மேலும் 3 மாடுகளை கடித்து குதறிய சிறுத்தை - கூண்டில் வைத்த இறைச்சியை தின்று விட்டு தப்பியது


வாணியம்பாடி அருகே மேலும் 3 மாடுகளை கடித்து குதறிய சிறுத்தை - கூண்டில் வைத்த இறைச்சியை தின்று விட்டு தப்பியது
x
தினத்தந்தி 2 Jan 2019 5:34 AM IST (Updated: 2 Jan 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே மேலும் 3 மாடுகளை சிறுத்தை கடித்து குதறியது. வனத்துறையினர் அதனை பிடிப்பதற்காக வைத்த கூண்டில் இருந்த இறைச்சியை சிறுத்தை தின்று விட்டு தப்பியுள்ளது.

வாணியம்பாடி, 

வேலூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி பகுதி கிராமங்கள் மலைகள் சூழ்ந்தவையாக விளங்குகின்றன. ஒரு புறம் ஏலகிரி மலை தொடரை ஒட்டிய சிறிய மலைகளும், மறுபுறம் நீண்டநெடிய மேற்குதொடர்ச்சி மலையும் இங்கு பசுமை போர்த்தியதுபோல் காணப்படுகிறது.

கடந்த வாரம் வாணியம்பாடி அருகே வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை சிக்கனாங்குப்பம் கிராமத்தில் 5 மாடுகளை கொன்று விட்டு தப்பியது. அதன்பின்னர் கரும்பு வயலில் சிறுத்தை இருந்ததை அறிந்த பொதுமக்கள் அதனை விரட்டுவதற்காக சென்றனர். ஆனால் ஆவேசம் அடைந்த சிறுத்தை கரும்பு வயலுக்குள்ளிருந்து பாய்ந்து வந்து பொதுமக்களை விரட்டி 5 பேரை காயப்படுத்திவிட்டு தப்பியது. சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டுகளை வைத்தனர்.

இவற்றில் 2 கூண்டில் மாட்டு இறைச்சியை வைத்திருந்தனர். மற்றொரு கூண்டில் நாயை கட்டி வைத்திருந்தனர். ‘ஆட்டோமேட்டிக் சிஸ்டம்’ முறையில் கூண்டு தயாரிக்கப்பட்டது. கூண்டில் உள்ள இறைச்சியை திண்பதற்காக சிறுத்தை கூண்டுக்குள் கால் வைக்கும்போதே திறந்திருக்கும் கதவு மூடிக்கொண்டு சிறுத்தையை அமுக்கி கூண்டுக்குள் தள்ளிவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

4-வது கூண்டில் கோழியை கட்டி வைத்திருந்தனர். இந்த கூண்டுக்குள் கோழியை பிடிப்பதற்காக தலையை நுழைத்தாலே மேலிருக்கும் இரும்புக்கதவு சிறுத்தையின் தலையை கூண்டுக்குள் அமுக்கிவிடும் முறையில் தயார் செய்யப்பட்டிருந்தது. இந்த கூண்டுகளில் சிறுத்தை சிக்கிவிடும் என எதிர்பார்த்து வனத்துறையினர் அதனை கண்காணித்து வந்தனர்.

இரவு நேரங்களில்தான் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்பதால் சிக்கனாங்குப்பம், அம்பலூர், சங்கரபுரம், ஈச்சங்கால், தும்பேரி, அரப்பாண்டகுப்பம் உள்ளிட்ட 15 கிராம பொதுமக்களை வெளியே வர வேண்டாம், இரவு வீட்டை பூட்டியே வைத்திருங்கள் என எச்சரித்திருந்தனர்.

ஆனால் 3 நாட்களுக்கு மேலாகியும் சிறுத்தை சிக்கவில்லை. கூண்டில் வைத்த இறைச்சியும், கட்டப்பட்டிருந்த நாயும் அப்படியே இருந்தன. சிறுத்தை ஆந்திர வனப்பகுதிக்குள் சென்று விட்டது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் திடீரென வரலாம் என்பதால் கூண்டை அகற்றாமல் விட்டிருந்தனர்.

இந்த நிலையில் சிக்கனாங்குப்பம் அருகே ராஜாமணிவட்டம் என்ற பகுதியில் ரவி என்ற விவசாயி கட்டி வைத்திருந்த 2 மாடுகளையும், ஒரு கன்றுக்குட்டியையும் நேற்று முன்தினம் இரவு சிறுத்தை கடித்து குதறிவிட்டு தப்பியது. மேலும் அந்த பகுதியில் சிறுத்தையை பிடிப்பதற்காக வைத்த ஒரு கூண்டில் இருந்த இறைச்சியையும் அந்த சிறுத்தை தின்று விட்டு கூண்டில் சிக்காமல் தப்பியுள்ளது. நேற்று காலை வனத்துறையினர் அங்கு சென்றபோது இறைச்சி இல்லாமல் இருந்ததை கண்டு வியப்படைந்தனர். இறைச்சியை தின்பதற்காக சிறுத்தை உள்ளே கால்வைத்தாலேயே அது பிடிபட்டுவிடும் என நம்பியிருந்த நிலையில் லாவகமாக இறைச்சியை சிறுத்தை தின்றுவிட்டு தப்பியதை உணர்ந்தனர்.

சிறுத்தை கடித்து குதறியதில் 2 மாடுகள் இறந்து விட்டன. கன்றுக்குட்டி மட்டும் காயத்துடன் தப்பியது. அதனை உரிமையாளர் ரவி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்.

சிறுத்தை ஆந்திராவுக்குள் தப்பிவிட்டது என வனத்துறையினர் கூறிய நிலையில் “நான் இங்குதான் இருக்கிறேன்” என்ற பாணியில் சிறுத்தை இப்போது மேலும் 3 மாடுகளை கடித்து குதறியதோடு, இறைச்சியையும் தின்று விட்டு கூண்டில் சிக்காமல் தப்பியுள்ளதால் எந்த நேரத்திலும் கிராமத்துக்குள் அந்த சிறுத்தை வரலாம் என்ற நிலைதான் உள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் மாலை 5 மணிக்கே பனிப்பொழிவு தொடங்கிவிடுவதால் கிராம மக்கள் குளிரின் பிடியில் சிக்கியுள்ளனர். இப்போது சிறுத்தை நடமாட்டம் மீண்டும் உள்ளது அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இது குறித்து கிராமப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “நாட்டறம்பள்ளி அருகே பச்சூர், கொத்தூர் பகுதியிலும் அடிக்கடி சிறுத்தைகள் புகுந்து விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆடு, மாடுகளை கொன்று வருகிறது. இப்போது ஆம்பூர், வாணியம்பாடி பகுதியிலும் சிறுத்தைகள் மிரட்டி வருகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும் ஆந்திர மாநில எல்லைக்கு அருகாமையில் உள்ளது. எனவே ஆந்திர வனத்துறையினருடன் தமிழக வனத்துறையினர் இணைந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


Next Story