நெல்லையில், கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை - பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
நெல்லையில் உள்ள கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நெல்லை,
பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்களுக்கான உறைகள் மற்றும் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர எளிதில் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக், பிளாஸ்டிக்கால் ஆன தாள்கள், தட்டுக்கள், கப்புக்கள், டீ கப்புகள், தண்ணீர் கப்புகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதையொட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது. மேலும் காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள், ஓட்டல்களில் நேற்று முதல் பிளாஸ்டிக் கேரி பேக், தண்ணீர் கப் உள்ளிட்ட பொருட்களில் உணவு பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
காய்கறி, பலசரக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் துணிப்பைகளை கொண்டு வந்து சரக்குகளை வாங்கி செல்கிறார்கள். ஓட்டல்களில் சட்னி, சாம்பார் ஆகியவை வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பாத்திரங்களில் வழங்கப்பட்டன. பெரும்பாலான கடைகளில் கேரி பைகள் கிடையாது என்று போர்டு எழுதி தொங்க விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நெல்லை மாநகர பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? பயன்படுத்தப்படுகிறதா? என்று சோதனை நடத்தவும், மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அதை உடனே பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நாராயண நாயர் உத்தரவிட்டார். இதையொட்டி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க நெல்லை மாநகராட்சி பகுதியில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளள. ஒவ்வொரு தனிப்படையிலும் மாநகராட்சி அதிகாரிகள் 10 பேர் இடம் பெற்று உள்ளனர். இந்த தனிப்படையினரை கண்காணிக்க 4 கண்காணிப்பு குழுவும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் நேற்று நெல்லை டவுன், சந்திப்பு, தச்சநல்லூர், வண்ணார்பேட்டை, புதிய பஸ்நிலையம், மேலப்பாளையம் உள்ளிட்ட 10 இடங்களில் உள்ள ஜவுளிக்கடைகள், சிறிய கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள், பலசரக்கு கடைகள் உள்ளிட்ட கடைகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கடைகளில் பதுக்கிவைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் கேரி பைகள், கப்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து அதை மூட்டை, மூட்டையாக கட்டி லாரிகளில் ஏற்றி கொண்டு சென்றனர். மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்வதோடு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து ஜவுளிகடைகளிலும் சோதனை நடத்தினார்கள். அங்கு பெரும்பாலும் துணிப்பைகள் தான் வைக்கப்பட்டு இருந்தன. சில கடைகளில் மட்டுமே பிளாஸ்டிக் கேரி பேக் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் நெல்லை மாவட்டம் முழுவதும் நகரசபை, நகர பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
Related Tags :
Next Story