டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து
சேலம் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முத்துராமலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்,
தமிழகத்தில் 14 வகையான “பிளாஸ்டிக்” பொருட்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, கடைகளில் பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் உள்ள 204 அரசு டாஸ்மாக் கடைகளிலும், அதனுடன் உரிமம் பெற்று நடத்தி வரும் பார்களிலும் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதில் தண்ணீர் பாட்டில்கள், சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு பார் உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்ட 5 குழுவினர் சேலம், மேட்டூர், ஓமலூர், காடையாம்பட்டி, ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடி, சங்ககிரி, எடப்பாடி உள்ளிட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்தனர்.
மேலும் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் பார்களில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் அவர் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அரசின் உத்தரவுபடி டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது. மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும். மீறி பயன்படுத்தப்படும் பார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் சங்ககிரி, வாழப்பாடியில் உள்ள பார்களில் பிளாஸ்டிக் டம்ளர் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
Related Tags :
Next Story