வானவில் : போன் காக்கும் கருவி
நமக்கு விருப்பமான ஸ்மார்ட்போனை தேடிப்பிடித்து ஆசையாய் வாங்கி வைத்திருப்போம்.
ஆனால் பல சமயங்களில் அது கை நழுவி கீழே விழுந்து நொறுங்கும்போது நமது இதயமும் ஒரு கணம் நொறுங்கித்தான் போகும். இப்போதெல்லாம் போனை ரிப்பேர் செய்வது என்பதே சாத்தியமில்லாமல் போய்விட்டது. மேலும் ஒருவாரம், 10 நாள் வரை போன் இல்லாமல் இருப்பதும் கடினம். போனை பத்திரமாக பாதுகாக்க வந்துள்ளது ஏடி ஸ்மார்ட்போன் கேஸ். இது வழக்கமான போன் கேஸ் போன்று ரப்பர் அல்லது சிலிக்கானால் ஆனதல்ல. இப்போது நாம் பயன்படுத்தும் கவர்கள் போனை காப்பாற்றாது. அழகுக்காகவும், ஸ்மார்ட்போன் தோற்றத்தை மெருகேற்றவும்தான் உதவுகின்றன. போன் கீழே கை தவறி விழும்போது இந்த கேஸ் காக்கும்.
25 வயதான பொறியியல் மாணவர் பிலிப் பிரென்ஸெல் இந்த கேஸை கண்டுபிடித்துள்ளார். இவர் ஜெர்மனியின் எலன் பல்கலைக்கழக மாணவர் ஆவார்.
இவர் தனது கோட்டை மாட்டும்போது, அதனுள் இருந்த இவரது ஸ்மார்ட்போன் கீழே விழுந்து உடைந்து போனது. இதுபோன்ற பிரச்சினை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதற்காக பல்வேறு சோதனைகளை இவர் மேற்கொண்டார். போனுக்கு மிகவும் தடிமனான கவர்களை வாங்கி போட்ட போதும் அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை.
ஏறக்குறைய நான்கு ஆண்டு ஆராய்ச்சியில் மொபைல் ஏர் பேக். அதாவது காரில் உள்ள ஏர் பேக் எப்படி பயணிகளின் உயிரைக் காக்கிறதோ அதைப் போல இவர் உருவாக்கிய கேஸ், மொபைல் போனை காக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் கேஸில் சென்சார் உள்ளது. இந்த உணர் கருவியானது, செல்போன் கை நழுவி கீழே விழத்தொடங்கும்போதே செயல்படத் தொடங்கும். தரையைத் தொடும் முன்பாக இதில் நான்கு பக்க வாட்டிலும் உள்ள 8 வகையான ஸ்பிரிங்குகள் வெளி வந்து போன் கீழே விழுந்து நொறுங்குவதை தவிர்க்கும்.
காரில் உள்ள ஏர் பேக் ஒரு முறை விரிந்து விட்டால், பிறகு அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. புதிய ஏர் பேக் சிஸ்டத்தைத்தான் வாங்கி பொருத்த வேண்டும். ஆனால் இந்த ஏடி போன் கேஸை மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இந்த ஸ்பிரிங் கம்பியை மீண்டும் கேஸினுள் வைக்க முடியும்.
இந்த ஸ்மார்ட் கேஸ் வழக்கமான உறைகளைப் போன்று தடிமனாக இல்லை. இதனால் ஸ்மார்ட்போன் எடையும் அதிகரிக்காது. அதே சமயம் ஸ்மார்ட்போன் நொறுங்குவதையும் காக்கும். இந்த மாடல் காப்புரிமைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இது பெருமளவில் தயாரித்து விற்பனைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story