வானவில் : அசத்தும் பிரிண்ட் பிரஷ்
இப்போதெல்லாம் கையெழுத்து சரியாக இருக்கிறதா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
காரணம் நினைக்கும் விஷயங்களை அழகாக டைப் செய்து பிரிண்ட் எடுத்து கீழே கையெழுத்து போட்டுவிடலாம். கையில் எழுதும் பழக்கமே மறைந்து வருகிறது. எதுவாக இருந்தாலும், குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ் அப் தகவல். அலுவலகமாக இருந்தால் இமெயில் பதில். கருப்பு வெள்ளை நிலை மாறி இப்போது வண்ணத்திலும் பிரிண்ட் எடுக்க முடிகிறது. ஆனால் பிரிண்டரின் உதவியோடு காகிதத்தில் மட்டுமே பிரிண்ட் எடுக்கலாம். நீங்கள் விரும்பும் தகவலை சுவற்றிலோ, சிறிய மரக்கட்டையிலோ அல்லது உங்கள் ஆடையிலோ எழுத்துகளாக அச்சிட விரும்பினால், அது சாத்தியமா? ஆனால் அதையும் சாத்தியமாக்கியுள்ளது பிரிண்ட் பிரஷ் எக்ஸ்.டி.ஆர்.
ஸ்டாக்ஹோமைச் சேர்ந்த பிரிண்ட் டிரீம்ஸ் என்ற நிறுவனம் கையடக்கமான பிரிண்டரை உருவாக்கியுள்ளது. இது வயர்லெஸ் மூலம் செயல்படும். வை-பை இணைப்பு மூலம் இதை இணைக்கலாம். இதனால் நீங்கள் விரும்பும் தகவலை உங்கள் மொபைல் போனில் டைப் செய்து இதற்கு அனுப்பிவிட்டால், நீங்கள் எங்கெங்கு விரும்புகிறீர்களோ அந்த இடங்களில் இதன் மூலம் பிரிண்ட் செய்யலாம். யு.எஸ்.பி. மூலமாகவும் இதில் தகவலை பரிமாறலாம். அதனால் ஸ்மார்ட்போன் இல்லாமலும் பிரிண்ட் செய்ய முடியும். இதை பேனா போல இடமிருந்து வலமாக மட்டுமின்றி வலமிருந்து இடமாகவும் இழுக்க முடியும்.
ஒரு வரிக்கு அடுத்த வரி இடைவெளியை இது தானாகவே துல்லியமாக நிர்ணயிக்கும். இதனால் வரிகள் கோணலாகும் என்ற அச்சமும் தேவையில்லை.
இதில் 11.1 வோல்ட் லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 4 ஆயிரம் பிரிண்ட் வரை இது வேலை செய்யும். சமதளம் மட்டுமின்றி வளைவான, உருண்டையான பகுதிகளிலும் இதன் மூலம் பிரிண்ட் செய்யலாம். இதன் விலை சுமார் 299 டாலராக நிர்ணயிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது விரைவிலேயே விற்பனைக்கு வர உள்ளது.
Related Tags :
Next Story