தூர்ந்து போன வாணாபுரம் ஏரி உடனடியாக தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்


தூர்ந்து போன வாணாபுரம் ஏரி உடனடியாக தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 2 Jan 2019 10:11 PM IST)
t-max-icont-min-icon

வாணாபுரத்தில் உள்ள பிரமாண்ட ஏரி தூர்ந்து போயுள்ளதால் நீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

வாணாபுரம், 

வாணாபுரத்தில் 80 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை மையமாகக் கொண்டு சுமார் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவையையும் இந்த ஏரி பூர்த்தி செய்து வருகிறது.

இந்த நிலையில் ஏரியை சரியான முறையில் பொதுப்பணித்துறையினர் பராமரிக்காததால் ஏரி தூர்ந்து போன நிலையில் காணப்படுகிறது. ஏரியை ஆழப்படுத்தாததால் மழைக்காலங்களில் குறைந்த அளவே தண்ணீர் தேங்குகிறது. எனவே பயிர் சாகுபடி செய்யும்போது தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் மகசூல் எடுக்க முடியாமல் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் வரத்து கால்வாய்களும் தூர்ந்து போயுள்ளதால் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால் மழைக்காலங்களில் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டுவது கிடையாது.

தூர்ந்துபோன ஏரியை ஓரளவிற்காவது தூர்வாரினால் ஏரிக்கு வரும் தண்ணீரானது ஒரு சில மாதங்களாவது தேங்கி நிற்கும். எனவே ஏரியை தூர்வார வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இப்பகுதி விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

எனவே விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் இந்த ஏரியை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூர்வார வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள் மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story