பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், ஒரே நாளில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


பொள்ளாச்சி நகராட்சி பகுதியில், ஒரே நாளில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 5:50 PM GMT)

பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் ஒரே நாளில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி,

தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. அதை தொடர்ந்து பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜ், நகரமைப்பு அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், மாரியப்பன் ஆகியோர் தலைமையிலான குழுக்கள் ஒவ்வொரு கடைகள், டாஸ்மாக் பார்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு சில கடைகளில் வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். நகராட்சி பகுதியில் மட்டும் நேற்று ஒரே நாளில் 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாக்கோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள் தெர்மக்கோல் குவளைகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக துணி பை, வாழை இலை, பாக்கு மட்டை தட்டு, காகித பை, பட்டர் சீட்டு மற்றும் மறுசுழற்சி செய்ய கூடிய பைகளை பயன்படுத்தலாம்.

முதல் நாள் என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஒரு சிலர் மக்காள சோளத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர். அந்த பைகளையும் பயன்படுத்த கூடாது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story