பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை


பொள்ளாச்சியில் துணிகரம் வீடு புகுந்து 19 பவுன் நகை திருட்டு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2 Jan 2019 5:50 PM GMT)

பொள்ளாச்சியில் வீடு புகுந்து 19 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் பிரமேஷ்குமார் (வயது 60). இவர் மருந்து, மாத்திரைகள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சம்பூர்ண லட்சுமி. இவர்களுடைய மகன் நிசாந்த், மகள் சவுமியா. இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு இருந்ததால் பிரமேஷ்குமார் வீட்டுக்கு மகன், மகள் மற்றும் பேரக்குழந்தைகள் வந்திருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 28-ந்தேதி அனைவரும் குடும்பத்துடன் திருவனந்தபுரத்துக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் 31-ந்தேதி பொள்ளாச்சிக்கு திரும்பி வந்தனர். வீட்டிற்கு வந்ததும் முன் பக்க கதவை திறக்க முடியாததால், பின் பக்கம் சென்று பார்த்த போது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, முன்பக்க கதவினை திறக்க முடியாமல் இருக்க, தாள்போடப்பட்டு இருந்தது. மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமேஷ்குமார், மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது பீரோவில் இருந்த 19 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுணர்கள் வந்து அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். திருட்டு நடந்த வீட்டின் முன்பக்க நுழைவு வாயில் பகுதியில் 3 நாட்களாக செய்திதாள்கள் எடுக்காமல் அப்படியே இருந்து உள்ளது. மேலும் வீட்டிற்கு வெளியே செருப்பு இல்லை. பகலிலும் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை கண்காணித்து மர்ம ஆசாமிகள் நகைகளை திருடி சென்று உள்ளனர். எனவே பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story