தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்ககோரி தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தர்மபுரியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் பச்சாகவுண்டர், முன்னு, சின்னம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன், மாவட்ட தலைவர் மாதையன், மாவட்ட பொருளாளர் சரோஜா, மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், ராஜி, கிருஷ்ணன், பரசுராமன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. எனவே தர்மபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்.
வறட்சியால் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயிகள் பெற்ற விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் காவிரி ஆற்று உபரி நீரில் 300 டி.எம்.சி. அளவு கடலில் வீணாக கலக்கிறது. எனவே இந்த உபரி நீரில் ஒரு பகுதியை தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள 406 ஏரிகளிலும், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 78 ஏரிகளிலும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story