திண்டுக்கல்லில் பரிதாபம், கோட்டைக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி


திண்டுக்கல்லில் பரிதாபம், கோட்டைக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 2 Jan 2019 11:30 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கோட்டைக்குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

திண்டுக்கல், 

திண்டுக்கல் நாகல்நகர் இலுப்பமரம் 1-வது சந்துவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் மகன் ஸ்ரீசக்திவேல் (வயது 12). அதே பகுதியை சேர்ந்த துளசிராம் மகன் பிரபு (13). இவர்கள் இருவரும் நாகல்நகர் சவுராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள குமரன் பூங்காவுக்கு செல்வதற்காக சைக்கிளில் புறப்பட்டனர்.

அப்போது, அந்த வழியாக வந்த தங்களது வகுப்பு நண்பரான பாரதிபுரத்தை சேர்ந்த சரவணனையும் (12) அவர்கள் அழைத்தனர். அதன்படி, 3 பேரும் பூங்காவுக்கு சென்றனர். அங்குள்ள ஊஞ்சல், சறுக்கு ஆகியவற்றில் ஏறி விளையாடினர். பின்னர், அதன் அருகே உள்ள கோட்டைக்குளத்துக்கு 3 பேரும் சென்றனர். அங்கே தேங்கி இருந்த தண்ணீரை பார்த்ததும் ஸ்ரீசக்திவேல், பிரபு ஆகியோருக்கு குளிக்க ஆசை வந்தது.

உடனே இருவரும் உள்ளே இறங்கினர். சரவணனையும் குளிக்க அழைத்தனர். ஆனால் அவனுக்கு விருப்பமில்லாததால் கரையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குளித்து கொண்டிருந்த இருவரும் ஆழமான பகுதிக்கு சென்றனர். அவர்களுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தபடி அலறினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சரவணன் பூங்காவுக்குள் ஓடி சென்று அங்கிருந்தவர்களை காப்பாற்றுமாறு அழைத்தான். ஆனால், அவர்கள் வருவதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் இருவரது உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையறிந்து அங்கு சென்ற நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேக் தாவூத், மாணவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

குளத்தில் மூழ்கி பலியான மாணவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story