சூளகிரி அருகே முகாமிட்டிருந்த 50 யானைகள் சானமாவு வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு
சூளகிரி அருகே முகாமிட்டிருந்த 50 யானைகள் சானமாவு வனப் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு மற்றும் சூளகிரி அருகே போடூர்பள்ளம் ஆகிய வனப்பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த பல நாட்களாக முகாமிட்டுள்ளன. இவைகள் இரவு நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவற்றை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி மற்றும் வெவ்வேறு இடங்களில் உள்ள காட்டுப்பகுதிகளுக்கு விரட்டியடித்தாலும், மீண்டும், மீண்டும் அவை சானமாவு மற்றும் போடூர்பள்ளத்தில் உள்ள வனப்பகுதிக்கு திரும்பி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று போடூர்பள்ளத்தில் இருந்த 50 யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து சானமாவு வனப்பகுதிக்கு விரட்டினார்கள். இதையொட்டி ராயக்கோட்டை சாலையை யானைகள் கடந்து சென்றன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் யானைகள் செல்வதற்கு வசதியாக இப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
யானைகள் சாலையை கடந்து சென்றதை வாகன ஓட்டிகள் பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். ஆர்வத்தில் சிலர் ‘செல்பி’எடுத்து கொண்டனர். பின்னர் 50 யானைகளும் சானமாவு வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதைத் தொடர்ந்து அவைகள் 3 குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. தனித்தனியாக சுற்றி திரியும் இந்த யானைகளை ஒன்றாக சேர்த்து, அதன்பின்னரே தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
மேலும், யானைகள் நடமாட்டம் உள்ளதால் சானமாவு மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனிடையே, போடூர்பள்ளம் காட்டில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளன. இவைகளையும் விரட்டியடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story