தொழிற்சாலைகள்-தொழிலாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


தொழிற்சாலைகள்-தொழிலாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது - ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 2 Jan 2019 11:45 PM GMT (Updated: 2 Jan 2019 6:10 PM GMT)

நாட்டில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்வதாக தேனியில் நடந்த முதலீட்டாளர்கள் ஆயத்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2019 நடக்க உள்ளதை முன்னிட்டு தேனி மாவட்ட அளவில் முதலீட்டாளர்கள் ஆயத்த கூட்டம் தேனி அன்னஞ்சி விலக்கில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அரசு முதன்மை செயலரும், தொழில் ஆணையம் மற்றும் தொழில் வணிக இயக்குனருமான ராஜேந்திரகுமார் முன்னிலை வகித்தார். இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஆயத்தக் கூட்டத்துக்கான கையேட்டை வெளியிட்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

ஒரு நாட்டில் தொழில் வளம் பெருகினால் தான் அந்நாட்டு மக்களின் வாழ்வு, வளமும், நலமும் பெறும். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றுள்ளது. நாட்டில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலும் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

தற்போது தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அன்னிய தொழில் நிறுவனங்கள் தங்களது தொழில் முதலீடுகளை செய்துள்ளதோடு, உலக அளவில் புகழ்பெற்ற சிறந்த 61 தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழிற்சாலைகளை நிறுவியுள்ளன. இதன் மூலம் புதிய தொழிற்சாலைகள் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ரூ.200 கோடி முதலீடுகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 127 தொழில் முனைவோர்கள் மூலம் ரூ.115 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தின் போது, தொழில் முதலீட்டு ஒப்பந்தம் போட்ட தொழில் முனைவோர்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான சான்றிதழ்களை ஓ.பன்னீர்செல்வம் வழங்கி பாராட்டினார். கூட்டத்தில், திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story