குதிரை பேர ஆதாரத்தை வெளியிடுவதாக சித்தராமையா கூறியதால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது அமித்ஷா கடும் கோபம்


குதிரை பேர ஆதாரத்தை வெளியிடுவதாக சித்தராமையா கூறியதால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது அமித்ஷா கடும் கோபம்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:00 AM IST (Updated: 2 Jan 2019 11:52 PM IST)
t-max-icont-min-icon

குதிரை பேர ஆதாரத்தை வெளியிடுவதாக சித்த ராமையா கூறியதால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது அமித்ஷா கடும் கோபமடைந்துள்ளார்.

பெங்களூரு,

குதிரை பேர ஆதாரத்தை வெளியிடுவதாக சித்த ராமையா கூறியதால் கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது அமித்ஷா கடும் கோபமடைந்துள்ளார்.

ரூ.30 கோடி பேரம்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 20 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், தாமாக முன்வந்து விலகி பா.ஜனதாவில் சேருவதாக இருந்தால் மட்டும், கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யலாம். இல்லாவிட்டால் நாடாளுமன்ற தேர்தல் வரை ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று பா.ஜனதாவினருக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் காங்கிரசை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்களிடம் பா.ஜனதா தலைவர்கள் பேரம் பேசியது குறித்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கருத்து வெளியிட்டார். அதில் தலா ரூ.30 கோடி வரை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசுவதாக பா.ஜனதா மீது அவர் குற்றம்சாட்டினார்.

அமித்ஷா கடும் கோபம்

இந்த நிலையில் சித்தராமையா ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது என்றும், தாங்கள் அவ்வாறு குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறினர். இதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா, அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளதாகவும், நேரம் வரும்போது அதை வெளியிட தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இதனால் பா.ஜனதா தலைவர்கள் சற்று அச்சத்தில் தான் உள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த அமித்ஷா, கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் மீது கடும் கோபத்தை வெளிப் படுத்தியதாகவும், உரிய வாய்ப்பு இல்லாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜனதாவுக்கு அவப்பெயர்

குதிரை பேரம் தொடர்பாக ஏதாவது ஆதாரம் வெளியானால், அது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்று அக்கட்சியின் தலைவர்கள் கருதுகிறார்கள். இதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை என்றே சொல்லப் படுகிறது.

Next Story