கூட்டணி அரசுக்கு இருந்த சிக்கல் நீங்கியது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கியதால், ரமேஷ் ஜார்கிகோளி தனிமைபடுத்தப்பட்டார்


கூட்டணி அரசுக்கு இருந்த சிக்கல் நீங்கியது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கியதால், ரமேஷ் ஜார்கிகோளி தனிமைபடுத்தப்பட்டார்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:30 PM GMT (Updated: 2019-01-03T00:03:57+05:30)

ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கியதால், ரமேஷ் ஜார்கிகோளி தனிமைபடுத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு, 

ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கியதால், ரமேஷ் ஜார்கிகோளி தனிமைபடுத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

8 மந்திரிகள் பதவி ஏற்றனர்

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் கடந்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி நடைபெற்றது. இதில் 2 மந்திரிகள் நீக்கப்பட்டனர்.

புதிதாக 8 மந்திரிகள் பதவி ஏற்றனர். மந்திரி பதவியை இழந்த ரமேஷ் ஜார்கிகோளி கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். மந்திரி பதவி பறிக்கப்பட்டதால், எம்.எல்.ஏ. பதவியை 4 நாட்களில் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்தார்.

கூட்டணி அரசுக்கு சிக்கல்

அதன் பிறகு அவர் கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதியில் இருந்து எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாயின. அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், நாகேந்திரா, பிரதாப்கவுடா, மகேஷ் கமடவள்ளி உள்பட 15 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதன் காரணமாக கூட்டணி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

வெளியே சென்றதை...

கடந்த 9 நாட்களாக யாருடைய கண்களிலும் தென்படாமல் இருந்த ரமேஷ் ஜார்கிகோளி நேற்று திடீரென பெலகாவி கோகாக்கில் உள்ள அவரது வீட்டில் இருந்தார். நேற்று அதிகாலை அவர் தனது வீட்டில் இருந்து வெளியே சென்றதை பலரும் பார்த்தனர்.

மேலும் தொடக்கத்தில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்கள் பின்வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி, கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சித்தராமையா ஆகியோர் தொடர்பு கொண்டு பேசினர்.

விலக மாட்டார்

எக்காரணம் கொண்டும் கட்சியை விட்டு விலகும் முடிவை எடுக்க வேண்டாம் என்றும், கட்சியிலேயே நீடிக்கும்படியும் அவர்கள் அறிவுறுத்தினர். இதன் காரணமாக அவர்கள் ரமேஷ் ஜார்கிகோளிக்கு ஆதரவு தெரிவிப்பதில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரமேஷ் ஜார்கிகோளியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 15-ல் இருந்து 5 ஆக குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ரமேஷ் ஜார்கிகோளி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமேஷ் ஜார்கிகோளியும் காங்கிரசை விட்டு விலக மாட்டார் என்றே சொல்லப்படுகிறது. இதனால் கூட்டணி அரசுக்கு நீடித்து வந்த சிக்கல் விலகிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Next Story