கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம்


கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Jan 2019 2:45 AM IST (Updated: 3 Jan 2019 12:12 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர், ஓசூர், காவேரிப்பட்டணம், தேன் கனிக்கோட்டை, சூளகிரி, ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி என மாவட்டத்தின் பல்வேறு சிறு, சிறு நகரங்களில் 100-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடை வைத்து, பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யும் சம்பவம் நடந்து வருகிறது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணகிரியில் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடைகளின் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற போராட்டம் என அறிவிப்பு பேனர்களும் வைத்துள்ளனர். இது குறித்து பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், கிருஷ்ணகிரி நகரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் கவர் மற்றும் மூலப்பொருட்கள் விற்பனை செய்து வருகிறோம். தற்போது தமிழக அரசால் கடந்த 1-ந் தேதி முதல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை நாங்கள் விற்பனை செய்வதில்லை.

இந்த நிலையில் அரசு அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கடைகளில் ஆய்வு செய்கிறேன் என கூறி கடைகளில் நுழைந்து 50 மைக்ரானுக்கு மேலுள்ள பிளாஸ்டிக் கவர்களையும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் பறிமுதல் செய்கின்றனர். நாங்கள் மாநில அமைப்புடன் இணைந்து செயல்படுகிறோம். ஆகவே, மாவட்ட கலெக்டர், நகராட்சி ஆணையர் ஆகியோர் எங்கள் தொழில் பாதிக்காத வண்ணம், அழைத்து பேசி, தொடர்ந்து கடைகளை திறந்து விற்பனை செய்ய ஆலோசனை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story