போடியில், காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு


போடியில், காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம சாவு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

போடியில், காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்து போனார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

போடி, 

போடியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் ஜெயபால் (வயது 23). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரும், மதுரை மாவட்டம், சமயநல்லூரை சேர்ந்த வீரையா மகள் தமிழ்செல்வி (23) என்பவரும் கடந்த 2016-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தமிழ்செல்வி திருமணத்திற்கு பின் தனது பெற்றோருடன் பேசாமலேயே இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக தனது தந்தை வீட்டில், தனக்கு நகை போட வேண்டும் என அவர் கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்செல்விக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதாக தெரிகிறது. உடனே அவரை போடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஜெயபாலின் தந்தை சேகர் தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர்கள் போடிக்கு வந்து தமிழ்செல்வியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் தமிழ்செல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய தந்தை வீரையா போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். மேலும் தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி 2¾ ஆண்டுகள் ஆவதால் உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story