பள்ளிபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் அமைச்சர் தங்கமணி தகவல்


பள்ளிபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் 2 மாதங்களில் நிறைவடையும் அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2019 4:15 AM IST (Updated: 3 Jan 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் புதிய பாலம் கட்டும் பணிகள் இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

பள்ளிபாளையம், 

பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் காவிரி ஆற்றின் மீது ரெயில்வே பாலம் உள்ளது. ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில்கள் இந்த பாலத்தின் மீது பள்ளிபாளையம் வழியாக சேலம், சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்கின்றன. ரெயில்வே பாலத்தின் கீழ் ஆற்றை ஒட்டி நுழைவு பாலம் வழியாக இருசக்கர வாகனங்கள், பஸ்கள், லாரிகள், சென்று வந்தன.

ஒடப்பள்ளியில் நீர்மின்நிலையம் கட்டப்பட்டதால் ஆற்று நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்லும் வழியில் நீர் நிரம்பி விடுகிறது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த வழியாக சேசசாயி காகித ஆலை, பொன்னி சர்க்கரை ஆலை, ஓடப்பள்ளி, கொக்கராயன்பேட்டை, மொளசி ஆகிய பகுதிக்கு செல்ல வேண்டி உள்ளது. ஆற்றுநீர் தேக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் எஸ்.பி.பி. காலனி சென்று, மீண்டும் ஓடப்பள்ளி பிரிவு ரோடு வந்துதான் செல்ல வேண்டி உள்ளது. தற்போது வரை இந்த நிலை நீடிக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கையை ஏற்று தற்போது அந்த பகுதியில் புதிதாக பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அமைச்சர் தங்கமணி வேண்டுகோளை ஏற்று, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்த பணிகள் நடைபெற ரூ.25 கோடி ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை அமைச்சர் தங்கமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-

பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 2 மாதங்களில் இந்த பணிகள் நிறைவடையும். இந்த பாலத்தோடு பள்ளிபாளையத்தில் 3 பாலங்கள் கட்டப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் மீது ரூ.33 கோடியில் உயர்மட்ட பாலம், எஸ்.பி.பி. காலனியில் ரூ.45 கோடியில் ரெயில்வே மேம்பாலம் ஆகியவை கட்டப்பட்டு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். குமாரபாளையம் தொகுதியில் குமாரபாளையத்தில் கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு உள்ளது. விரைவில் என்ஜினீயரிங் கல்லூரி கட்டப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Next Story