மைசூருவில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 15 கடைகள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளுடன், வாக்குவாதம்- பரபரப்பு


மைசூருவில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 15 கடைகள் இடித்து அகற்றம் மாநகராட்சி அதிகாரிகளுடன், வாக்குவாதம்- பரபரப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 4:45 AM IST (Updated: 3 Jan 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

மைசூருவில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

மைசூரு, 

மைசூருவில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகள் நேற்று இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அதிகாரிகளுடன், கடைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து.....

மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்திநகர்-கப்பனஹள்ளி பகுதியில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அதில் கடைகள் கட்டி இருந்தனர். இதுபற்றி அறிந்த மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த ஒரு ஆண்டுகளாக, கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீசு அனுப்பி வந்தது.

ஆனால் கடைகளின் உரிமையாளர்கள், கடைகளை காலி செய்யவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் நேற்று காலை சாந்திநகர்-கப்பனஹள்ளி பகுதிக்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் கடைகளின் உரிமையாளர்களிடம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்து அகற்ற வந்து உள்ளோம் என்று கூறினார்கள்.

15 கடைகள் இடித்து அகற்றம்

இதற்கு கடைகளின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார், கடைகளின் உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 15 கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். பின்னர் அங்கிருந்து மாநகராட்சி அதிகாரிகள் புறப்பட்டு சென்று விட்டனர்.

Next Story