பள்ளிபாளையம் மாரியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியது பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்


பள்ளிபாளையம் மாரியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியது பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் திருவிழா தொடங்கியது. விழாவில் பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையம் அக்ரஹாரம் காவிரி கரையில் உள்ள ஓம்காளியம்மன் கோவிலில் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது.

நேற்று கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் தீ மிதிக்கும் விழா நடந்தது. இதையொட்டி காலையில் பூசாரி தலைமையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீ மிதிக்க வரிசையில் நின்றனர். முதலில் பூசாரி கரகத்துடன் தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்தார். பின்பு ஆண், பெண் பக்தர்கள், சிறுவர், சிறுமிகள் தீ மிதித்தனர். குழந்தைகளை சுமந்தபடி ஆண்கள், பெண்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம் ஆவத்திபாளையம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நேற்று காலை தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

பள்ளிபாளையம் ராஜவீதியில் உள்ள செங்குந்த ஓம்காளியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரமும் செய்து இருந்தனர். காலை 10 மணியளவில் பக்தர்கள் கைகளில் தீச்சட்டி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். பின்னர் மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. விழாவில் இன்று (வியாழக்கிழமை) மாலை பட்டிமன்றம், நாளை (வெள்ளிக்கிழமை) மாலை பூந்தேர் ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story