கூடுவாஞ்சேரியில் முதல் கொட்டமேடு வரை குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு வரையிலான சாலையில் உள்ள பள்ளங்களால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு கிராமம் வரை சுமார் 18 கிலோ மீட்டர் சாலை செல்கிறது. இந்த சாலை மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலையை ஒட்டியுள்ள நந்திவரம் பெருமாட்டுநல்லூர், காயரம்பேடு, களிவந்தபட்டு, கன்னிவாக்கம், குமிழி, கல்வாய், நெல்லிக்குப்பம், திருப்போரூர், மாம்பாக்கம், செம்பாக்கம், கரும்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இதனால், இந்த சாலை வழியாக கார், மோட்டார் சைக்கிள்கள், பஸ், வேன், போன்ற வாகனங்கள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கான பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சாலையின் நடுவே ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளது. பல இடங்கள் குண்டு குழியுமாக காணப்படுகின்றன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். பள்ளங்களில் விழுந்து விபத்தையும் சந்திக்கும் நிலை காணப்படுகிறது.
இந்த சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.