மேல்முறையீடு செய்யாமல் திருவாரூர் இடைத்தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க வேண்டும் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் பேட்டி
மேல்முறையீடு செய்யாமல் திருவாரூர் இடைத்தேர்தலை அ.தி.மு.க. சந்திக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் கூறினார்.
சேலம்,
தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடைபெறும் என்று மத்திய, மாநில தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக சேலம் செவ்வாய்பேட்டையில் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் விளக்க கூட்டம் நேற்று நடந்தது.
இதில் சி.ஐ.டி.யு. மாநில தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் கடந்த 4½ ஆண்டுகளாக அதிகாரத்தில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளும் பன்னாட்டு மற்றும் பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாகவே உள்ளது. உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்தவும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், மாத ஓய்வூதியம் ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வர்க்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இதைப்பற்றி மோடி அரசு கண்டுகொள்ளவே இல்லை. இதனால் வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் தொழிலாளர்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில் அனைத்து சுமைப்பணி தொழிலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் ஆட்சி செய்யும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, தேர்தலில் மக்களை சந்திக்க முடியாத அரசாக உள்ளது. இதனால் அவர்கள் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து மேல்முறையீடு செய்யப்போவதாக முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூர் தேர்தலை ஆளும் கட்சியான அ.தி.மு.க. சந்திக்க வேண்டும். அதற்கு மாறாக மக்களை சந்திக்காமல் இருக்க கூடாது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினையில் மக்களை சந்திக்க முடியாமல் அதை கலவரத்திற்கு கொண்டு சென்றது. தற்போதும், தூத்துக்குடியில் ஆலையை முழுமையாக மூடுவதற்கு அ.தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படவில்லை. ஏதோ ஒரு வகையில் முதலாளிகள் உடன் சமரசத்தில் ஈடுபட்டுள்ளனர் என சந்தேகம் எழுகிறது. மத்திய அரசுக்கு தொடர்ந்து மாநில அரசு அடிமையாகவே உள்ளது.
தமிழக கவர்னர் உரையில் எந்த புது விஷயமும் இல்லை. தற்போது பொங்கலுக்கு அறிவித்துள்ள அறிவிப்பு கூட முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அறிவித்த திட்டங்களின் தொடர்ச்சியாகவே இருக்கிறது. தமிழகத்தில் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து அமைச்சர்களும், பல்வேறு தரப்பினரும் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இது ஜெயலலிதாவை இழிவுப்படுத்தும் செயலாக உள்ளது.
இவ்வாறு சவுந்திரராஜன் கூறினார்.
Related Tags :
Next Story