பிளாஸ்டிக் பை சோதனைக்கு எதிர்ப்பு: சேலத்தில் பூக்கடைக்காரர்கள் சாலை மறியல்
பிளாஸ்டிக் பை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் பூக் கடைக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி சேலம் பூ மார்க்கெட் பகுதியில் 25 கிலோ பிளாஸ்டிக் பை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தலைமையில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
டவுனில் உள்ள முதல் அக்ரஹாரம், 2-வது அக்ரஹாரம், சின்னக்கடை வீதி, பெரியக்கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிக்கடை, செல்போன் கடை, டீக்கடை, காய்கறி மற்றும் பூ மார்க்கெட், ஓட்டல் ஆகிய இடங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அம்மாபேட்டை உதவி ஆணையாளர் ஜெயராஜ் தலைமையில் உதவி செயற்பொறியாளர் செந்தில்நாதன், சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், கந்தசாமி, பாலு ஆகியோர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனை பூக்கடைகளிலும் நடைபெற்றது. இதனால் ஆத்திரம் அடைந்த பூக்கடைக்காரர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டவுன் போலீசார் அங்கு வந்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பூக்கடைக் காரர்கள் கூறும் போது, ‘பூக்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பிளாஸ்டிக் பைகள் உதவிகரமாக உள்ளன. மாற்றுப்பொருளான துணிப்பை விலை அதிகமாக இருப்பதால் எங்களால் வாங்க முடியவில்லை. மேலும் அவற்றில் எடுத்து சென்றால் பூ மொட்டுகள் சேதம் அடைந்து விடும். எனவே எங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க வேண்டும்’ என்றனர்.இதைகேட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படவில்லை. இந்த பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக பைகள் உள்ளன. இதை வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இது தொடர்பாக ஏற்கனவே உங்களிடம் தெரிவிக்கப்பட்டது. அரசின் உத்தரவை பின்பற்றுங்கள் என்றனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story