திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி அவமதிப்பு ஊழியர் மீது நடவடிக்கை


திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி அவமதிப்பு ஊழியர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2019 11:00 PM GMT (Updated: 2 Jan 2019 7:34 PM GMT)

திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடியை அவமதித்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி,

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தினமும் தேசிய கொடி ஏற்றப்படுவது வழக்கம். அவ்வாறு காலையில் ஏற்றப்படும் கொடியை மாலை 6 மணிக்குள் இறக்கிவிடுவது நடைமுறை. தேசிய கொடிக்கு தனி மரியாதை உண்டு. இதனை ஏற்றி, இறக்குவதில் கூட விதிமுறைகள் உள்ளது. இதனை கடைபிடிக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இதனை மீறி செயல்பட்டால் நாட்டின் தேசிய கொடியை அவமதித்த செயலாகும்.

இந்த நிலையில் திருச்சியில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி அவமதிப்பு சம்பவம் நடந்தது. தலைமை தபால் நிலைய கட்டிடத்தின் மாடியில் தினமும் காலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு இறக்கிவிடுவார்கள். இதனை சுழற்சி முறையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடியை மாலையில் இறக்கும் போது கயிற்றில் இருந்து முழுமையாக இறக்கிவிட்டு, தேசிய கொடியை கயிற்றில் இருந்து கழற்றாமல் அப்படியே சுருட்டி, மடித்து தடுப்பு சுவரில் வைத்து, காற்றில் பறக்காமல் இருப்பதற்காக அதன் மேல் ஒரு செங்கலை வைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மறுநாள் காலையில் வரும் போது தேசிய கொடியை எடுத்து வந்து அதனை கயிற்றில் கட்டி ஏற்றுவதற்கு சிரமப்பட்டு, சுலபமாக இருப்பதற்காக இவ்வாறு செய்து வந்திருக்கின்றனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினமும் வழக்கம் போல மாலையில் தேசிய கொடியை இறக்கிய பின் அதன் மேல் கல்லை வைத்துவிட்டு ஊழியர் ஒருவர் சென்றார். தேசிய கொடி அவமதிக்கப்பட்டது குறித்து தலைமை தபால் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக தபால் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறுகையில், “தேசிய கொடியை அவமதித்தவர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யக்கூடியவர். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்திற்கு பின் தேசிய கொடியை ஏற்றி, இறக்க அலுவலக ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கொடியை இறக்கிய பின் கழற்றி அலுவலகத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றனர். இதற்கிடையில் நேற்று மாலை 6 மணிக்கு தேசிய கொடியை தபால் துறை ஊழியர்கள் இறக்கிய பின் அதனை கயிற்றில் இருந்து கழற்றி தனியாக மடித்து அலுவலகத்தின் உள்ளே எடுத்து சென்றனர்.

Next Story