பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் வணிகர்களுக்கு, கடலூர் கலெக்டர் எச்சரிக்கை
கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அன்புசெல்வன் கூறினார். கடலூர் மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர்,
தமிழக அரசு உத்தரவுபடி கடலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. இதை கண்காணிக்க அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களும், வணிகர்களும் இந்த பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளை பயன்படுத்த தொடங்கி இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. குறு, சிறு தொழிலாக பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்தவர்களுக்கு, மாற்றாக துணிப்பைகள் தயாரிக்க மானியத்துடன் கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மரவள்ளிக்கிழங்கு மூலம் தட்டு, டம்ளர் தயாரிக்க முடியும் என்று ஒருவர் கூறி, அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அந்த புதிய தொழிலை விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தடையை மீறி பயன்படுத்திய வியாபாரிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம். இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிகர்களுக்கு ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து வழங்காத நிறுவனங்களுக்கும் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள், ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சிகளில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளில் களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். தன்னார்வ நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட வேண்டும். பள்ளி, கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகளிடம் பிளாஸ்டிக் பொருட்கள் தடை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி இருக்கிறோம். பொதுமக்களும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து மாவட்ட நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.
முன்னதாக கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அதிகாரிகள் குடியிருப்பு ஆகியவற்றை கலெக்டர் அன்புசெல்வன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அலுவலகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பழைய கலெக்டர் அலுவலகத்தில் பயன்படுத்தாமல் இருக் கும் அறைகளை வாட கை கட்டிடத்தில் இயங்கி வரும் மற்ற அரசு அலுவலகங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன் மற்றும் அதிகாரி கள் இருந்தனர்.
Related Tags :
Next Story