8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி நடத்த இருந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு


8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி நடத்த இருந்த விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 3 Jan 2019 3:45 AM IST (Updated: 3 Jan 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி நடத்த இருந்த விவசாயிகளின் உண்ணா விரத போராட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது

சேலம்,

சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்த நில அளவீடு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கில், அடுத்த கட்ட பணிகளுக்கு கோர்ட்டு தடை விதித்துள்ளது. இதற்கிடையில், இந்த திட்டத்துக்காக கூடுதல் நிலம் எடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டரிடம் ஆட்சேபனை கடிதங்கள் வழங்கினர். மேலும் அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

இதற்காக சேலம் டவுன் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர். இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கூறும் போது, ‘8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இந்த திட்டத்தை கைவிடக்கோரி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று(நேற்று), நாளை(இன்று) மற்றும் 4-ந் தேதிகளில் ஏதேனும் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க மாநகர போலீசிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி உண்ணாவிரதம் இருக்க கோர்ட்டு மூலம் அனுமதி பெறுவோம்’ என்றனர்.

Next Story