வாலாஜா அருகே விபத்து கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி துக்கவீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்


வாலாஜா அருகே விபத்து கன்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பலி துக்கவீட்டுக்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 2 Jan 2019 11:30 PM GMT (Updated: 2 Jan 2019 8:01 PM GMT)

வாலாஜா அருகே கன்டெய்னர் லாரியின் டிரெய்லர் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது இந்த சோக சம்பவம் நடந்தது.






வாலாஜா, 

சென்னை சோளிங்கநல்லூர் பகுதியில் உள்ள பனையூர் கும்மிடிகான் தோப்பு என்ற இடத்தை சேர்ந்தவர் சாதிக் அலி (வயது 40). சோளிங்கநல்லூர் மீன்மார்க்கெட்டில் கோழிக்கடை நடத்திவந்தார். இவருடைய உறவினர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இறந்துவிட்டார். அவருடைய காரிய நிகழ்ச்சிக்காக சாதிக் அலி நேற்று காலை தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் ஆரணிக்கு சென்றிருந்தார். காரியம் முடிந்ததும் மாலையில் அனைவரும் ஊருக்கு திரும்பினர். காரை சாதிக் அலி ஓட்டி உள்ளார்.

நேற்று இரவு 7 மணியளவில் வேலூர் மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடியை தாண்டி வன்னிவேடு ஊராட்சி பகுதியில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோட்டின் ஓரத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் டீசல் நிரப்பிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று தேசியநெடுஞ்சாலைக்கு வந்து எதிர்திசையில் திரும்பியது.

இதை பார்த்ததும் சாதிக் அலி காரை நிறுத்த முயன்றார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் கன்டெய்னர் லாரியின் டிரெய்லர்மீது கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் சென்று அவர்களை மீட்க முயன்றனர்.

ஆனால் இடிபாடுகளுக்குள் அவர்கள் சிக்கியிருந்ததால் மீட்கமுடியவில்லை. அதைத்தொடர்ந்து வாலாஜா போலீஸ் நிலையம் மற்றும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று காருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர்.

காருக்குள் 2 பெண்கள் உள்பட 6 பேர் இருந்தனர். அவர்கள் அனைவருமே இருந்த இடத்திலேயே பிணமாக கிடந்தனர். 6 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம்பகவத், துணைபோலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வாலாஜா இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் சாதிக் அலி, அவருடைய மனைவி பர்வீன் (35), மகன் மகபூப்பாஷா (15), சாதிக் அலியின் தந்தை அன்வருதீன் (70), தாய் அலாமாபீ (65) மற்றும் பர்வீனின் உறவினர் அகமதுபாஷா (60) என்பது தெரியவந்தது. 6 பேரின் உடல்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story