விருதுநகரில் நகராட்சி நூற்றாண்டு திட்டப்பணிகள் முற்றிலும் முடக்கம்


விருதுநகரில் நகராட்சி நூற்றாண்டு திட்டப்பணிகள் முற்றிலும் முடக்கம்
x
தினத்தந்தி 2 Jan 2019 9:30 PM GMT (Updated: 2 Jan 2019 8:28 PM GMT)

விருதுநகர் நகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்யப்பட்ட நகராட்சி நூற்றாண்டு நிதியில் செய்யப்பட வேண்டிய பல்வேறு திட்டப்பணிகள் முற்றிலுமாக முடங்கி உள்ள நிலையில் நகராட்சி நிர்வாக ஆணையரும் இது குறித்து நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது.

விருதுநகர்,

விருதுநகர் நகராட்சியின் நூற்றாண்டை யொட்டி கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் ரூ.25 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் இருந்து நகர் பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என நகராட்சிகளின் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து ரூ.14 கோடியில் சாலை சீரமைப்பு பணி மற்றும் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள தொகையில் 3 இடங்களில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள், நகராட்சி அலுவலகத்தில் புதிய கட்டிடம் கட்டுதல், நகராட்சி பூங்காவை சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இதில் நகராட்சி பூங்கா சீரமைப்பு பணி பாதி மட்டும் மேற்கொள்ளப்பட்டதோடு முடங்கி விட்டது. 3 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டுவதற்கு திட்டமிட்ட நிலையில் ஒரு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணி 90 சதவீதமும், மற்றொரு மேல்நிலை குடிநீர் தொட்டியின் கட்டுமான பணி 60 சதவீதமும் முடிவடைந்துள்ள நிலையில் தொடர்ந்து பணி நடைபெறாமல் முடங்கி விட்டது. 3-வது மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிக்கு பூமிபூஜை போட்டதோடு கட்டுமான பணி தொடங்கப்படாமலே முடக்கம் அடைந்து விட்டது. நகராட்சி அலுவலக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடங்களை முற்றிலுமாக இடித்து அகற்றாமல் அப்படியே விட்டுவிட்டதோடு, புதிய கட்டிடம் கட்டுவதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இது பற்றி பல முறை சுட்டிக்காட்டப்பட்டும் நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்க தயாராக இல்லை.

பணிகளை அவ்வப்போது ஆய்வு நடத்த வரும் மண்டல இயக்குனரும் இதனை கண்டு கொள்ளாமல் வந்து செல்லும் நிலை உள்ளது. நகராட்சி நிர்வாக ஆணையருக்கு நகர் மக்கள் சார்பிலும், முன்னாள் கவுன்சிலர்கள் சார்பிலும் பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பப்பட்டும் நகராட்சி நிர்வாக ஆணையரும் முடங்கி உள்ள திட்டப்பணிகளை முடுக்கிவிட எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்பது ஏன் என்று தெரியவில்லை.

அடுத்த இரு மாதங்களுக்குள் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் இந்த பணிகளை தொடங்காவிட்டால் அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வித பணிகளும் நடக்க முடியாத நிலை ஏற்படும். அதனை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால் இத்திட்டப்பணிகள் மேலும் 6 மாதங்களுக்கு முடங்கி விடும் சூழல் ஏற்பட்டுவிடும்.

பணிகள் முடக்கத்திற்கு உண்மை காரணம் என்ன என்பது குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் விசாரணை மேற்கொண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி நகராட்சி நிர்வாகத்தால் வேறு தேவைக்காக செலவிடப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டியதும் அவசியம் ஆகும்.

நகராட்சி நூற்றாண்டு நிதியை முறையாக பயன்படுத்தி பணிகளை முடிக்காமலும் தொடங்கிய பணிகளை சரிவர செய்யாமலும், வேறு சில பணிகளை தொடங்காமலும் முடக்கி உள்ளது ஏன் என்பது குறித்து நகராட்சி நிர்வாக ஆணையர் விசாரணை நடத்த முன்வராத நிலையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும் இந்த பிரச்சினையில் தலையிட்டு மாவட்ட தலைநகரான விருதுநகரில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம் முடக்கம் அடைந்துள்ளதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியம் ஆகும்.

Next Story