மண்டபத்தில் வீடுகளை சூழ்ந்த காவிரி கூட்டுக்குடிநீர்


மண்டபத்தில் வீடுகளை சூழ்ந்த காவிரி கூட்டுக்குடிநீர்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:00 PM GMT (Updated: 2 Jan 2019 8:28 PM GMT)

மண்டபத்தில் குழாய் உடைந்து வீடுகளை காவிரி கூட்டுக்குடிநீர் சூழ்ந்தது.

பனைக்குளம்,

மண்டபம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையையொட்டி நேற்று சாலையோரத்தில் காவிரிகூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் கசிந்து வெளியில் வந்து கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் அந்த குழாயில் உடைப்பு பெரிதாகி குடிநீர் அதிகஅளவில் வெளியேறி சாலையோரத்தில் இருந்த வீடுகளை மழை வெள்ளம்போல் சூழ்ந்தது. வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நின்றதால் அங்கு வசிப்பவர்கள் முழங்கால் அளவு நீரில் கடந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்ததும் மண்டபம் பேரூராட்சி நிர்வாகசெயல் அலுவலர் மங்சுநாத், இளநிலை உதவியாளர் முனியசாமி ஆகியோர் உத்தரவின்பேரில் பணியாளர்கள் விரைந்து வந்து வீடுகளை சூழ்ந்து தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குடிநீர்வடிகால் வாரியத்திற்கு தொலைபேசி மூலமும் தகவல் தெரிவித்தனர்.

இதே போல் ராமேசுவரம் திட்டக்குடியில் இருந்து கெந்தமாதனபர்வதம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி சாலையில் ஓடியது. மாவட்டத்தில் பல இடங்களில் மக்கள்குடிநீர் கிடைக்காமல் அலைந்து வரும் நிலையில் மண்டபம், ராமேசுவரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகி வருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வருத்தத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. மண்டபம்,ராமேசுவரம் பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story