கிரானைட் குவாரிகளை திறக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்


கிரானைட் குவாரிகளை திறக்கக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jan 2019 10:15 PM GMT (Updated: 2019-01-03T01:58:30+05:30)

மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளை திறக்கக்கோரி மதுரை அண்ணாநகரில் தொழிலாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

மதுரை,

மேலூர் பகுதியில் செயல்பட்டு வந்த கிரானைட் குவாரிகள் மற்றும் கிரானைட் தொழிற்சாலைகள் அனைத்தும் கிரானைட் முறைகேடு வழக்குகள் தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டு மூடப்பட்டன. இதுதொடர்பான வழக்குகள் மேலூர் மற்றும் மதுரை கோர்ட்டுகளில் விசாரணையில் உள்ளது. குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஏராளமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்தநிலையில் மூடப்பட்ட கிரானைட் குவாரிகளை மீண்டும் திறக்கக்கோரி தமிழ்நாடு கிரானைட் குவாரிகள் மற்றும் தொழிற்சாலைகள், அவை சார்ந்த தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் மதுரை அண்ணாநகர் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில தலைவர் பொற்கைபாண்டியன், மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொருளாளர் முரளி உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

போராட்டத்தில் பா.ஜ.க. மாநில செயலாளர் சீனிவாசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். முன்னதாக சீனிவாசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளுக்கு மட்டும் அரசு தடை விதித்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். வழக்குகள் இல்லாத குவாரிகளை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும். குவாரிகள் செயல்படுவதற்கு தடை விதித்த அரசு, தற்போது ஏன் நீங்கள் குவாரியை நடத்தவில்லை, உங்களின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என கேட்கிறது. இது வேடிக்கையாக இருக்கிறது. குவாரிகளை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்‘ என்றார்.

இதுகுறித்து மாநில தலைவர் பொற்கைபாண்டியன் கூறும்போது, “மேலூர் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு கிரானைட் கற்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி நமது நாட்டுக்கு கிடைத்தது. இதன்மூலம் மத்திய-மாநில அரசு களுக்கு அதிக அளவில் வருவாயும் கிடைத்தது. இந்தநிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள குவாரிகளை மூடியிருப்பது வேதனை அளிக்கிறது. இதில் 84 குவாரிகள் மீது மட்டுமே வழக்கு இருக்கிறது. வழக்குகள் நிலுவையில் உள்ள குவாரிகளை தவிர்த்து விட்டு மீதமுள்ள 91 குவாரிகளை உடனடியாக திறந்து, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். வழக்குகள் இல்லாத குவாரியையும் மாவட்ட நிர்வாகம் மூடியிருக்கிறது“ என்றார்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான குவாரி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Next Story